/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு பி.ஜி.,க்களில் தங்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!: 60 சதவீதம் சட்ட விரோதமாக இயங்குவதாக 'திடுக்' பெங்களூரு பி.ஜி.,க்களில் தங்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!: 60 சதவீதம் சட்ட விரோதமாக இயங்குவதாக 'திடுக்'
பெங்களூரு பி.ஜி.,க்களில் தங்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!: 60 சதவீதம் சட்ட விரோதமாக இயங்குவதாக 'திடுக்'
பெங்களூரு பி.ஜி.,க்களில் தங்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!: 60 சதவீதம் சட்ட விரோதமாக இயங்குவதாக 'திடுக்'
பெங்களூரு பி.ஜி.,க்களில் தங்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!: 60 சதவீதம் சட்ட விரோதமாக இயங்குவதாக 'திடுக்'
ADDED : ஜூலை 25, 2024 11:05 PM
பெங்களூரு: பெங்களூரில், 'பேயிங் கெஸ்ட்' எனும் பி.ஜி.,யில் தங்கியிருந்த பீஹார் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதால், பி.ஜி.,க்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், 60 சதவீத பி.ஜி.,க்கள், சட்ட விரோதமாக இயங்குவதாகவும் 'திடுக்' தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக பெங்களூரு உள்ளது. இங்கு 20,000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி பி.ஜி.,க்கள் இயங்கி வருகின்றன. இதில் பணிக்கு செல்வோர், படிக்க செல்வோர் தங்கி வருகின்றனர்.
* 'டிவி, வைபை'
பெரும்பாலான பி.ஜி.,க்களில், மூன்று வேளை உணவு, தங்குவதற்கு என மாதந்தோறும் 5,000 ரூபாய் வசூலிக்கின்றனர். இதுவே 'டிவி', வைபை உட்பட வசதிகளுடன் இருக்கும் அறைகள், 15,000 முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இத்தகைய பி.ஜி.,க்கள் நடத்துபவர்கள், இதை நிர்வகிக்க, மேலாளர்களையும் நியமித்துள்ளனர்.
பீஹாரைச் சேர்ந்தவர் க்ருதி குமாரி, 24. இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். கோரமங்களாவின் வி.ஆர்., லே -- அவுட்டில் உள்ள, பி.ஜி.,யில் தங்கியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன் இரவு 11:30 மணியளவில், மர்ம நபர் ஒருவர் விடுதிக்குள் புகுந்து, அறையில் படுத்திருந்த க்ருதி குமாரியை, கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனால், பி.ஜி.,க்களின் தங்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தங்கும் விடுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, நகர போலீசார் பல முயற்சிகள் செய்தும் முடியவில்லை. உரிமம் பெறாமல், சட்ட விரோதமாக இயங்கும் பி.ஜி.,க்கள் அதிகமாக உள்ளன.
பி.ஜி.,க்கள் நடத்த பெங்களூரு மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் பல பி.ஜி.,க்கள் உரிமம் பெறாமல் உள்ளன. வணிக ரீதியாக மின்சாரம், தண்ணீர், வரிகளை தவிர்க்க, முறைகேடாக செயல்படுகின்றன.
* பாதிப்பு
இவ்வாறு நகரில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பி.ஜி.,க்கள் முறைகேடாக இயங்குகின்றன. இதனால் உரிமம் பெற்று பி.ஜி.,க்கள் நடத்துவோர் பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக பெங்களூரு தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்க செயலர் சுகி சியோ கூறியதாவது:
நகரில் தங்கும் விடுதிகளின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் மூன்று அல்லது நான்கு அறைகள் கொண்ட வீடுகள் கூட, பி.ஜி.,யாக மாற்றப்பட்டு உள்ளன. மின்சாரம், தண்ணீருக்கு அதிக கட்டணம் செலுத்துவதை தவிர்க்க, உரிமம் பெறுவதில்லை. ஒரே நபர், ஐந்து அல்லது ஆறு பி.ஜி.,க்களை நிர்வகிக்கும் நிகழ்வுகளும் உள்ளன.
இதுபோன்ற சட்டவிரோத பி.ஜி.,க்களால், அங்கு தங்குவோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. விடுதியில் வசிப்பவர்களை தவிர, வெளியில் இருந்து வருபவர்களை விடுதியின் உரிமையாளர்கள் கண்காணிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
* போலீஸ் கைவிரிப்பு
பெங்களூரு மாநகராட்சியின் சுகாதார துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஊழியர்கள் பற்றாக்குறையால், ஒவ்வொரு பி.ஜி.,க்களையும் சரிபார்க்க முடியாத நிலை உள்ளது. எங்களுக்கு வரும் புகார்களை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பி.ஜி.,க்களை ஆய்வு செய்கிறோம். சட்ட விரோதமாக இயங்கும் பி.ஜி.,க்களை அடையாளம் காண்பது சிரமமானது' என்றார்.
பெங்களூரு கிழக்கு பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ராமன் குப்தா கூறியதாவது:
கடந்த ஆறு மாதங்களில், பி.ஜி.,க்களில் பாதுகாப்பை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். குறிப்பாக, பிப்ரவரியில் போலீசாரும், பி.ஜி., உரிமையாளர்களும் இணைந்து, பி.ஜி.,க்களில் தங்கி உள்ளவர்களை சந்திக்க வருவோரின் விபரங்களை சேகரிக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சட்ட விரோதமான பி.ஜி.,க்கள் உள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எங்களின் பணியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
... புல் அவுட் ..
தற்போது, பி.ஜி.,க்களில் இத்தனை பேர் தான் தங்க வேண்டும், கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்ற எந்த விதிமுறைகளும் இல்லை. பல பி.ஜி.,க்கள், அதிகமானவர்களை சேர்க்கின்றனர். இதனால், சுகாதாரம், சுத்தமின்மை, பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படுகிறது. இனி வணிக உரிமம் வழங்கும் முன், சில அடிப்படை விதிமுறைகளை கொண்டு வருவது குறித்து யோசித்து வருகிறோம்.
துஷார் கிரிநாத்,
தலைமை கமிஷனர்,
பெங்களூரு மாநகராட்சி.