Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 109 கன்னடர்கள் சிக்கி தவிப்பு

 போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 109 கன்னடர்கள் சிக்கி தவிப்பு

 போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 109 கன்னடர்கள் சிக்கி தவிப்பு

 போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 109 கன்னடர்கள் சிக்கி தவிப்பு

ADDED : மார் 03, 2026 06:26 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: ''போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில், 109 கன்னடர்கள் சிக்கி தவிக்கின்றனர்,'' என, கர்நாடக வருவாய் அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா கூறினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதலால், மத்திய கிழக்கு நாடுகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட துபாய் உட்பட சில நாடுகளில், 109 கன்னடர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஹெல்ப்லைன் நம்பர் அறிவித்துள்ளோம்.

கன்னடர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய அரசின் வெளியுறவு துறையுடன் நாங்கள் பேசி வருகிறோம். கன்னடர்கள் தங்களை மீட்டு வர சிறப்பு விமானம் அனுப்பும்படி கேட்கின்றனர்.

விசாவுக்கு ஏற்பாடு விமான போக்குவரத்துக்கு தடை இருப்பதால், சிறப்பு விமானத்தை அனுப்புவது சாத்தியம் இல்லை. 22253707 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம். சிலருக்கு விசா பிரச்னை இருப்பதாக கூறுகின்றனர். மத்திய அரசு மூலம் விசா கிடைக்க ஏற்பாடு செய்வோம்.

எவ்வளவு பணம் செலவானலும், நாங்கள் வழங்குகிறோம். யாரும் கவலைப்பட வேண்டாம். இது, எதிர்பாராத சம்பவம். கொஞ்சம் பொறுமையுடன் காத்திருங்கள் என்று சொல்லி வருகிறோம்.

அதிகபட்சமாக பல்லாரியை சேர்ந்த, 32 பேர் துபாயில் சிக்கி உள்ளனர். மாநில அவசர கால செயல்பாட்டு மையம், டில்லியில் உள்ள கர்நாடக பவன் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பத்திரமாக உள்ளேன்

துபாயில் சிக்கியுள்ள பல்லாரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத் ரெட்டி நேற்று வெளியிட்ட வீடியோவில், '' நான் துபாயில் சிக்கி இருப்பது தெரிந்ததும், என் நலன் விரும்பிகள், தொண்டர்கள், தொகுதி மக்கள் என்னை மொபைல் போனில் அழைத்து பேசினர். பாதுகாப்பாக உள்ளீர்களா என்று கேட்டு கவலைப்பட்டனர். யாரும் கவலைப்பட வேண்டாம். நானும், என் குடும்பத்தினரும் பத்திரமாக உள்ளோம். பல்லாரியை சேர்ந்தவர்கள், 32 பேர் இங்கு சிக்கியுள்ளனர். அவர்களும் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களை பத்திரமாக அழைத்து வருவது என் பொறுப்பு,'' என்றார்.

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா எழுதிய கடிதம்:

மத்திய கிழக்கு நாடுகளில் போரால் பதற்றம் நிலவும் இந்த நேரத்தில், வேலை, படிப்பு, சுற்றுலாவுக்கு சென்ற இந்திய குடிமக்கள் குறித்து நான் கவலை கொள்கிறேன். மேற்கு ஆசியாவில் உள்ள பல நாடுகள், தங்கள் வான்வெளியில் வெளியிட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன்விளைவாக கன்னடர்கள் உட்பட பல இந்தியர்கள் துபாய் உள்ளிட்ட இடங்களில் சிக்கி தவிக்கின்றனர். கன்னடர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக அரசின் தலைமை செயலர், மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்து உள்ளார்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து இந்திய துாதரகங்கள் மூலம், துபாய் உள்ளிட்ட இடங்களில் சிக்கி உள்ளவர்களை கண்காணிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கை, வழிகாட்டுதல் வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியுறவு, விமான போக்குவரத்து அமைச்சகங்கள், மாநில அரசுகளை ஒருங்கிணைத்து குழு அமைக்க வேண்டும். சிக்கி தவிப்பவர்கள் பற்றி அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைக்க டிஜிட்டல் அமைப்பு சேவைகளை துவக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us