Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 5,500 அடி உயர சித்தாரகுட்டா மலை

5,500 அடி உயர சித்தாரகுட்டா மலை

5,500 அடி உயர சித்தாரகுட்டா மலை

5,500 அடி உயர சித்தாரகுட்டா மலை

ADDED : அக் 09, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
கர்நாடகாவின் மலைநாடு மாவட்டம் என்று அழைக்கப்படும் சிக்கமகளூரு உயர்ந்த மலைகள், காபி தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் போன பகுதியாகும். சிக்கமகளூருக்கு சுற்றுலா செல்வோருக்கு குதிரேமுக்கா, சீத்தலாயங்கிரி ஆகிய மலைகள் அதிகம் தெரிந்திருக்கும். சுற்றுலா பயணியரால் அதிகம் அறியப்படாத இடங்களும் உள்ளன. இதில் ஒன்று தொட்டபலே சித்தாரகுட்டா மலை.

இந்த மலை, கடல் மட்டத்தில் இருந்து, 5,500 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு செல்லும்வழி சிவகிரி பாதை என அழைக்கப்படுகிறது. டிரெக்கிங் செல்வோரின் சொர்க்கமாக இம்மலை அமைந்து உள்ளது.

காபி தோட்டங்கள், செங்குத்தான பாறைகள், வளைந்து நெளிந்து செல்லும் பாதை வழியாக டிரெக்கிங் செல்ல வேண்டும். இது, மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருக்கும்.

மலை உச்சியில், 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. மலை உச்சியிலிருந்து லேக்வில் அணை, பாபாபுடன் கிரி, பத்ரா ஏரி, யெம்மேதொட்டி கிராமத்தின் அழகை கண்டு ரசிக்கலாம். சூரிய உதயம், அஸ்தமனத்தை கண்டு ரசிக்கும் அழகிய இடமாகவும் உள்ளது.

மலையேற்றத்தின் போது அரிய வகை பறவைகளை கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிட்டும். அக்டோபர் முதல் மார்ச் வரை மலையேற்றத்திற்கு உகந்த காலமாக பார்க்கப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதி என்பதால், மலையேற்றம் செல்வோர், சுற்றுலா வழிகாட்டியை தங்களுடன் அழைத்து செல்வது நல்லது.

பெங்களூரில் இருந்து சித்தாரகுட்டா மலை 255 கி.மீ., துாரத்தில் உள்ளது. சிக்கமகளூரில் இருந்து 53 கி.மீ., பீருரில் இருந்து 14 கி.மீ., ஷிவமொக்காவில் இருந்து, 63 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து பீருருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சேவை உள்ளது. ரயிலில் செல்வோர் பீருர், சிக்கமகளூரு, ஷிவமொக்கா ரயில் நிலையங்களில் இறங்கி அங்கிருந்து, மலையை அடையலாம்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us