/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முருடேஸ்வர் கடலில் 8 வயது சிறுவன் பலி முருடேஸ்வர் கடலில் 8 வயது சிறுவன் பலி
முருடேஸ்வர் கடலில் 8 வயது சிறுவன் பலி
முருடேஸ்வர் கடலில் 8 வயது சிறுவன் பலி
முருடேஸ்வர் கடலில் 8 வயது சிறுவன் பலி
ADDED : செப் 23, 2025 11:37 PM
உத்தர கன்னடா : கடலில் குளித்த 8 வயது சிறுவன், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
பெங்களூரு, பீதரஹள்ளியை சேர்ந்தவர் ரவி ரெட்டி, 38. இவர் தசரா விடுமுறையை கொண்டாடுவதற்காக, தன் குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை உத்தர கன்னடாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இவர்கள் நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு முருடேஸ்வரை அடைந்தனர். அங்குள்ள லாட்ஜில் பைகளை வைத்துவிட்டு முருடேஸ்வர் கோவிலுக்கு செல்ல தயாராகினர்.
அப்போது, முருடேஸ்வர் கடற்கரையில் குளித்துவிட்டு கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். இதற்காக, குடும்பத்தினர் அனைவரும் கடலில் குளித்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக வந்த பெரிய அலையில் ரவி ரெட்டியின் மகன் கிரித்திக், 8, குடும்ப உறுப்பினர் வசந்தா, 27, ஆகியோர் சிக்கினர். அவர்கள் இருவரும் நீரில் மூழ்கினர். சிறிது நேரத்தில் இருவரும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
அப்போது, இருவரும் மயக்க நிலையில் இருந்தனர். முதலுதவி செய்தபோது, வசந்தா பிழைத்துக் கொண்டார். ஆனால், சிறுவன் கிரித்திக் அசைவற்று கிடந்தான். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, முருடேஸ்வர் போலீஸ் நிலையத்தில் ரவி ரெட்டி புகார் அளித்தார். புகாரில், 'ஆழமான பகுதி என்ற எச்சரிக்கை பலகை வைக்கவில்லை. குளிக்கக்கூடாது என்ற எச்சரிக்கை பலகையும் வைக்கவில்லை' என, கூறியுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.