ADDED : ஜூன் 10, 2026 10:52 PM
கலபுரகி: பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாணவியர் விடுதியில், மாணவியர் சேர்ந்து மதுபான, 'பார்ட்டி' நடத்திய வீடியோ பரவியுள்ளது. பலரும், மாணவியரின் செயலை கண்டித்துள்ளனர்.
கலபுரகி மாவட்டம் ஆலந்த் தாலுகாவின், கடகஞ்சி கிராமத்தில் மாணவியர் விடுதி உள்ளது. இது பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. கிராமப்புற மாணவியரின் வசதிக்காக இந்த விடுதி கட்டப்பட்டது.
விடுதிக்குள் நேற்று முன்தினம் இரவு, இரண்டு இளைஞர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து, மாணவியர் நள்ளிரவு வரை மதுபான பார்ட்டி நடத்தினர்.
மாணவியர் மதுபானம் பார்ட்டி நடத்தியதை தெரிந்து கொண்ட மூன்று வார்டன்கள், அதை தன் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து கொண்டனர். இதை காண்பித்து 'பிளாக்மெயில்' செய்து, மாணவியரிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
அரசு விடுதியில் மாணவியர் மதுபான பார்ட்டி நடத்திய வீடியோ பரவியதால், இவ்விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய விடுதியில், மாணவியரை கண்டித்து நல்வழி படுத்தாமல், பணம் வசூலிக்கும் வார்டன் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலரும் வலியுறுத்துகின்றனர்.
விடுதியில் பணியாற்றும் சில வார்டன்கள், மாணவியரை தவறான பாதைக்கு திருப்புவதாக, அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிராமங்களில் வசிக்கும் மாண வியருக்கு உதவும் நோக்கில், விடுதிகளை அரசு கட்டியுள்ளது. இதில் தங்கும் மாணவியர், படிப்பில் ஆர்வம் காட்டாமல், மதுபானம் பார்ட்டி நடத்துவது சரியல்ல என, பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
