ADDED : செப் 23, 2025 11:45 PM

மைசூரு : பெண்களுக்கான கோலப்போட்டியில் தங்கள் திறமையை பெண்கள் வெளிப்படுத்தினர்.
பெண்கள், குழந்தைகள் நலத்துறை, பெண்கள் தசரா துணை கமிட்டி சார்பில், மைசூரு அரண்மனை வாணிவிலாஸ் அரண்மனை முன் கோலப்போட்டியை நடத்தியது.
மறைந்த யானை அர்ஜுனா நினைவாக குருபரஹள்ளியை சேர்ந்த புனித் வரைந்த கோலத்துக்கு, தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா மலர் துாவி போட்டியை துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், ''மகளிர் தசரா துணை கமிட்டி ஏற்பாடு செய்துள்ள கோலப்போட்டியில் பங்கேற்க, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட பெண்கள் வந்துள்ளனர். தசரா திருவிழா, தேசிய திருவிழாவாக மேம்படுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.
போட்டியில் மைசூரு மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், குடும்பத்துடன் பங்கேற்றனர். இதற்காக அரண்மனை வளாகத்தில் பெரியளவில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இப்போட்டியில் பங்கேற்ற நஞ்சன்கூடுவை சேர்ந்த ஸ்வேதா கூறுகையில், ''கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் பெரும்பாலும் மொபைல் போனிலும், இளம்பெண்கள் சமூக ஊடகத்திலும் மூழ்கி உள்ளனர். இதன் அடிப்படையில் 'அடிமை ஆகாதீர்கள்' என்ற தலைப்பில் கோலம் வரைந்துள்ளேன்,'' என்றார்.
மைசூரின் ஸ்பந்தனா, மாநில அரசின் 'கிரஹஜோதி' திட்டத்தை மையப்படுத்தி, விளக்குடன் பெண் இருக்கும் கோலம் வரைந்திருந்தார். துமகூரை சேர்ந்த நிர்மலா, புலியின் மீது சாமுண்டீஸ்வரி அமர்ந்து இருப்பது போன்று தத்ரூபமாக கோலம் போட்டிருந்தார்.
அதுபோன்று அன்னை துர்காவை யானை பாதுகாப்பது; பெண்களாக பிறந்ததற்கு பெருமைப்பட வேண்டும்; நந்தி மற்றும் சிவலிங்கம் என பல்வேறு விதமான கோலங்களை பெண்கள் வரைந்திருந்தனர்.