Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அடங்கியிருந்த பா.ஜ., அதிருப்தி அணியினர் மீண்டும்...  'ஆக்டிவ்!'; மகனின் தலைவர் பதவியை காப்பாற்ற எடியூரப்பா தீவிரம்

அடங்கியிருந்த பா.ஜ., அதிருப்தி அணியினர் மீண்டும்...  'ஆக்டிவ்!'; மகனின் தலைவர் பதவியை காப்பாற்ற எடியூரப்பா தீவிரம்

அடங்கியிருந்த பா.ஜ., அதிருப்தி அணியினர் மீண்டும்...  'ஆக்டிவ்!'; மகனின் தலைவர் பதவியை காப்பாற்ற எடியூரப்பா தீவிரம்

அடங்கியிருந்த பா.ஜ., அதிருப்தி அணியினர் மீண்டும்...  'ஆக்டிவ்!'; மகனின் தலைவர் பதவியை காப்பாற்ற எடியூரப்பா தீவிரம்

ADDED : டிச 05, 2025 08:51 AM


Google News
Latest Tamil News
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் இரண்டாவது மகனான விஜயேந்திரா, 52, கர்நாடக பா.ஜ., தலைவராக 2023ல் பொறுப்பேற்றார். இளம் வயதிலே அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்தது, மூத்த தலைவர்களை எரிச்சல் அடைய செய்தது.

'விஜயேந்திராவை பதவியில் இருந்து இறக்க வேண்டும்' என, அதிருப்தி அணியினர் உருவாகினர். இதில், ரமேஷ் ஜார்கிஹோளி, குமார் பங்காரப்பா, ஸ்ரீமந்த் பாட்டீல், பி.வி.நாயக், பரத் ஷெட்டி, சந்தோஷ், பசனகவுடா பாட்டீல் எத்னால் உட்பட பலர் இருக்கின்றனர்.

அடக்கி வாசிப்பு இந்த அதிருப்தி அணிக்கு, ரமேஷ் ஜார்கிஹோளி தலைமை வகிக்கிறார். 'விஜயேந்திராவை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தங்களில் யாராவது ஒருவரை மாநில தலைவராக்க வேண்டும்' என்பதே இவர்களின் ஒரே கோரிக்கை.

இதற்காக அடிக்கடி ரகசியமாக சந்தித்து ஆலோசித்தனர். டில்லிக்கு சென்றும், விஜயேந்திரா குறித்து குறை கூறி வந்தனர். இருப்பினும், இவர்கள் முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. அதேநேரம், எடியூரப்பா குடும்பத்தினரை பகிரங்கமாகவே விமர்சித்து வந்த எத்னாலை, கட்சியில் இருந்து மேலிடம் நீக்கியதால், மற்றவர்கள் அடக்கி வாசித்தனர்.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையிலான அதிருப்தி அணியினர் விமானம் மூலம் டில்லி சென்றனர். இது, மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரகசிய தகவல் பா.ஜ., மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வாலை சந்திப்பதற்காக, டில்லியில் உள்ள கர்நாடகா பவனில் காத்திருந்தனர். இது குறித்த படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதிருப்தி அணியினர், நேற்று முன்தினம் மேலிட பொறுப்பாளரை சந்தித்து நீண்ட நேரம் பேசினர்.

அப்போது, 'விஜயேந்திரா கட்சி தலைவராக ஒழுங்காக பணியாற்றவில்லை. ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டங்களை வீரியமாக நடத்தவில்லை. மாநிலத்தின் தற்போதைய பிரச்னைகள் குறித்து, அவருக்கு எந்த கவலையும் இல்லை. கட்சியை வலுப்படுத்தவும் தவறிவிட்டார். ஊடகங்கள் முன் தோன்றுவதில் தன் குறியாக இருக்கிறார்.

'காங்கிரசில் நடக்கும் உட்கட்சி பிரச்னையை பயன்படுத்த தவறி விட்டார். கரும்பு விவசாயி, மக்காச்சோள பிரச்னை போன்ற முக்கியமான விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துவதில் தவறி விட்டார். கட்சியின் எதிர்காலத்திற்கும், அடுத்த சட்டசபை தேர்தலிலும் கட்சி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் தலைவர் மாற்றம் முக்கியம்' என, கூறியுள்ளனர்.

அடுத்து என்ன? தொடர்ந்து, இந்த அதிருப்தி அணியினர் மத்திய அமைச்சர் குமாரசாமி, பா.ஜ., மூத்த தலைவர்கள் அமித் ஷா, சோமண்ணா, பசவராஜ் பொம்மை ஆகியோரையும் சந்தித்தனர்.

இந்த சந்திப்புகள் குறித்து குமார் பங்காரப்பா கூறுகையில், ''பா.ஜ.,வில் கட்சி தலைவர் மாற்றம் என்பது ஒன்றரை ஆண்டுகளாக உள்ள கோரிக்கையாகும். அதைப்பற்றி பேச விரும்பவில்லை. பூத் மட்ட அளவில் கட்சியை பலப்படுத்த அமித் ஷா அறிவுறுத்தி உள்ளார். உள்ளாட்சி தேர்தல்களில் கவனம் செலுத்த கூறினார். மாநில அரசியல் நிலவரம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது,” என்றார்.

இதையடுத்து, தன் மகனின் தலைவர் பதவியை காப்பாற்ற எடியூரப்பாவும் டில்லி விரைந்துள்ளார். அவர், கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து, தன் மகனின் தலைவர் பதவியை காப்பாற்ற பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சந்திப்பின் மூலம்,'ஆக்டிவ் மோடில்' இருக்கும் அதிருப்தி அணி, மீண்டும்,'சைலன்ட்' ஆகுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us