Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தியவர் கைது

அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தியவர் கைது

அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தியவர் கைது

அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தியவர் கைது

ADDED : ஜூன் 14, 2025 11:07 PM


Google News
பாகல்கோட்: பிரசவ வார்டில் நர்ஸ் போன்று நடித்து, குழந்தையை கடத்திச் சென்ற பெண் கைது செய்யப்பட்டார்.

பாகல்கோட்டின் அரசு மருத்துவமனையில், மாபூபி, 30, என்ற நிறைமாத கர்ப்பிணி, பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு நேற்று முன் தினம் இரவு, பெண் குழந்தை பிறந்தது. நேற்று அதிகாலை 4:30 மணியளவில், பிரசவ வார்டில் தாயும், குழந்தையுடன் இருந்தார்.

அங்கு வந்த பெண், தன்னை நர்ஸ் என, அறிமுகம் செய்து கொண்டார். 'சளியை எடுக்க வேண்டும்' என கூறி, குழந்தையை எடுத்துச் சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், குழந்தையை மாபூபி தேடிச் சென்றார்.

பக்கத்து வார்டில், அந்த நர்ஸ் இருப்பதை கண்டார். அவரது பக்கத்தில் குழந்தை படுத்திருந்தது. அவரிடம் மாபூபி, குழந்தையை கேட்டபோது, அது தன் குழந்தை என, நாடகமாடினார்.

அதிர்ச்சியடைந்த மாபூபி, மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறினார். அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, குழந்தை தனக்கு பிறந்தது என, முரண்டு பிடித்தார்.

அவரது நடவடிக்கையால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அந்த பெண் குழந்தை பிரசவித்தவரா என பரிசோதிக்கும்படி கூறினர்.

டாக்டர்களும் அப்பெண்ணை பரிசோதித்தபோது, குழந்தை பிரசவிக்காதவர் என்பது உறுதியானது. அதன்பின் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மருத்துவனைக்கு வந்த நவநகர் போலீசார், அப்பெண்ணை விசாரித்தபோது, அவர் ராமதுர்கா தாலுகாவின், கானபேட்டில் வசிக்கும் சாக்ஷி யத்வாட், 24, என்பது தெரிந்தது. இவர் குழந்தையை கடத்தும்நோக்கில், நேற்று முன் தினம் மாலை, மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அனுமதி பெறாமல் பிரசவ வார்டில் தங்கினார். அக்கம், பக்கத்து படுக்கையில் இருந்த பெண்களிடம், தனக்கு குழந்தை பிறந்துள்ளது என, நாடகமாடினார்.

அதிகாலை பக்கத்து வார்டுக்குச் சென்று, நர்ஸ் போன்று நடித்து, மாபூபியின் குழந்தையை கொண்டு வந்ததை ஒப்புக் கொண்டார்.

அதன்பின் சாக்ஷி யாத்வாட், குழந்தை கடத்தலில் தொடர்புடைய அவரது தாய் மற்றும் இரண்டு சகோதரியரும் கைது செய்யப்பட்டனர்.

மாவட்ட மருத்துவமனை சர்ஜன் மகேஷ் கோனி கூறுகையில், “குழந்தை திருட்டு குறித்து, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். வார்டில் பாதுகாப்பில் அலட்சியம் குறித்தும் விசாரணை நடத்தப்படும்,” என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us