Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பா.ஜ., மீது மான நஷ்ட வழக்கு தொடர காங்., அரசு முடிவு

பா.ஜ., மீது மான நஷ்ட வழக்கு தொடர காங்., அரசு முடிவு

பா.ஜ., மீது மான நஷ்ட வழக்கு தொடர காங்., அரசு முடிவு

பா.ஜ., மீது மான நஷ்ட வழக்கு தொடர காங்., அரசு முடிவு

ADDED : மே 27, 2025 11:38 PM


Google News
கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை பற்றி, எதிர்க்கட்சியான பா.ஜ., பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, விளம்பரம் செய்வதாக குமுறி, கொந்தளிக்கும் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு, பா.ஜ., மீது மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, இம்மாதம் 20ம் தேதி, இரண்டு ஆண்டுகளை அரசு நிறைவு செய்தது. இதை முன்னிட்டு, விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவின், மாவட்ட விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக சாதனை மாநாடு நடந்தது.

இம்மாநாடு வெற்றிகரமாக நடந்ததால், முதல்வர் சித்தராமையா உட்பட காங்கிரஸ் தலைவர்கள் குஷியில் உள்ளனர். மேலிடத்திடம் தங்களுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளதாக நிம்மதியில் உள்ளனர்.

இதற்கிடையில் காங்கிரஸ் அரசின் சாதனை மாநாட்டை, பா.ஜ.,வினர் கிண்டல் செய்துள்ளனர். 'அரசு இரண்டு ஆண்டுகளில் என்ன வெட்டி முறித்தது என்பதற்காக, சாதனை மாநாடு நடத்துகிறது. விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கிறது; அரசு மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணியரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை; அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது; மக்கள் அவதிப்படுகின்றனர். ஆனால் அரசு சாதனை மாநாடு நடத்துகிறது' என, பாய்ந்தனர்.

அது மட்டுமின்றி, இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு தோற்றுள்ளது என, தோல்விகளை பட்டியலிட்டு, 'குற்ற பட்டியல்' என்ற தலைப்பில் ஊடகங்களில் பிரசாரம் செய்துள்ளது. இதனால் காங்கிரஸ் அரசு கொதிப்படைந்துள்ளது. அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவப்பிரசாரம் செய்வதாக, மானநஷ்ட வழக்கு தொடர, காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரின் 42வது முதன்மை மெட்ரோ பாலிடன் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். வழக்கு தொடர்பாக, அரசு தரப்பு வக்கீல்களுக்கு தேவையான தகவல்களை தெரிவிக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு துணை செயலர் குமட்டா பிரகாஷை நியமித்துள்ளது. வழக்கை நடத்த 67வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற அரசு வக்கீல் பி.எஸ்.பாட்டீல், 61வது சிட்டி சிவில், செஷன்ஸ் நீதிமன்ற வக்கீல் சைலஜா நயாம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us