கே.எஸ்.சி.ஏ., மஹாராஜா கோப்பையை அறிமுகப்படுத்திய டிராவிட்
கே.எஸ்.சி.ஏ., மஹாராஜா கோப்பையை அறிமுகப்படுத்திய டிராவிட்
ADDED : ஜூன் 12, 2026 10:49 PM
பெங்களூரு: வரும், 20ம் தேதி முதல் நடக்க உள்ள, கே.எஸ்.சி.ஏ., மஹாராஜா கோப்பை டி-20 போட்டி கோப்பையை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அறிமுகப்படுத்தினார். அத்துடன் இப்போட்டியில், மூன்று புதிய விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்டுதோறும், மஹாராஜா கோப்பை டி - 20 கிரிக்கெட் போட்டி நடத்தி வருகிறது. இந்தாண்டு, வரும், 20ம் தேதி முதல், ஜூலை 12 வரை இந்த போட்டிகள் நடக்கின்றன.
இந்த ஆண்டுக்கான கோப்பை அறிமுகம் விழா, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கோப்பையை இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அறிமுகம் செய்து வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
மஹாராஜா தொடர், பெங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளியில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போட்டி, மாநிலத்தின் கிரிக்கெட் வீரர்களின் திறமைக்கு ஒரு தளமாக இருக்கும்.
இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு, ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். உள்ளூர் லீக்கில் கவனத்தை ஈர்த்து, ஐ.பி.எல்.,ல் ஜொலித்த, மாநிலத்தை சேர்ந்த யஷ்ராஜ் பூஞ்சாவும் ஒருவர். இத்தொடரில் முதன் முறையாக விளையாடும் வீரர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
வைபவ் சூரியன்ஷி சிறப்புமிக்க வீரர். சச்சின் டெண்டுல்கருக்கு பின், 15 வயதில் அப்படிப்பட்ட ஒரு வீரரை கண்டுபிடிக்க, 40 ஆண்டுகளானது. 40 ஆண்டுகளுக்கு பின், மற்றொரு சச்சின் டெண்டுல்கராக வைபவ் சூர்யவன்ஷி வந்துள்ளார்.
வைபவ் தனித்துவமான வீரர்; நன்றாக விளையாடுகிறார்.
அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரிடம் ஒரு சிறப்பு திறமை உள்ளது. அவர் இதுபோன்ற ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி, இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டு, போட்டிகளை வென்று தருவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மஹாராஜா கோப்பை நிர்வாக குழு உறுப்பினர் சந்தோஷ் மேனன் பேசியதாவது:
ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் அணிகள், 'டாஸ்' போட்ட பிறகே, தங்கள் அணி சார்பில் விளையாடும், 11 வீரர்களின் பட்டியலை அறிவிக்கும். இனி, டாஸ் போடுவதற்கு முன்பே, விளையாட போகும், 11 பேரின் பெயரை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு பேட்ஸ்மேன், 'பிரீ ஹிட்' பந்தில் போல்ட் அல்லது கேட்ச் செய்யப்பட்டால், அப்போது எடுக்கப்படும் ரன்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது.
டி.ஆர்.எஸ்., எனும் முடிவு மறுஆய்வு முறை மூலம், ஒரு பேட்ஸ்மேன் ஆரம்பத்தில் 'அவுட்' என்று அறிவிக்கப்பட்டால், அப்போது அவர் எடுத்த ரன்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட மாட்டாது.
அதே வேளையில், டி.ஆர்.எஸ்., மூலம் அவர் 'அவுட் இல்லை' என்று முடிவு வந்தால், அவர் எடுத்த ரன்கள், அவருக்கும், அவரின் அணிக்கும் சேர்க்கப்படும்.
இந்த மூன்று விதிகள், நடப்பாண்டு மஹாராஜா கோப்பையில் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த முடிவு, கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
டிக்கெட்டுக்கான முன்பதிவு, 'டிஸ்டிரிக்' செயலி மூலம் செய்து கொள்ளலாம்; டிக்கெட் விலை 100, 200 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
