Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.,வுடன் கூட்டணி முன்னாள் பிரதமர் தேவகவுடா தகவல்

அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.,வுடன் கூட்டணி முன்னாள் பிரதமர் தேவகவுடா தகவல்

அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.,வுடன் கூட்டணி முன்னாள் பிரதமர் தேவகவுடா தகவல்

அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.,வுடன் கூட்டணி முன்னாள் பிரதமர் தேவகவுடா தகவல்

ADDED : அக் 04, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: “வரும் அனைத்து தேர்தல்களிலும், பா.ஜ.,வுடன் கூட்டணி தொடரும்,” என, ம.ஜ.த.,வின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின், ஐந்து மாநகராட்சிகள் உட்பட, மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல்கள், அடுத்த சட்டசபை, லோக்சபா தேர்தல்களிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும். பிரதமர் நரேந்திர மோடியுடனான எங்களின் நல்லுறவில், எந்த மாற்றமும் இல்லை.

என்னை பற்றி பிரதமர், ஒரு வார்த்தையும் தவறாக பேசியது இல்லை; இரண்டு கட்சிகளின் உறவு வலுவாக உள்ளது.

கல்யாண கர்நாடகாவின் ஆறு மாவட்டங்களில், மழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா விமானம் வழியாக, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதே போன்று பொறுப்பு அமைச்சர்களும், அந்த இடத்துக்கு சென்று, உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் சில நாட்களில், நானும் மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு சென்று, மக்களை சந்தித்து பிரச்னைகளை கேட்டறிவேன். அதன்பின் பிரதமருக்கு கடிதம் எழுதுவேன். மக்களின் பிரச்னைகளுக்கு, மாநில அரசு எந்த வகையில் அக்கறை காட்டுகிறது என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மழையால் மக்கள் பிரச்னைகளில் சிக்கியுள்ளனர். வெள்ளப்பெருக்கால், பெரும்பாலான கிராமங்களில் சாலைகள், பாலங்கள் பாழாகியுள்ளன; உயிர்ச்சேதமும் ஏற்பட்டது. விளைச்சலை இழந்து விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

முதன் முறையாக, பீமா ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது; மக்கள் பரிதவிக்கின்றனர். மாநில அரசு உடனடியாக மக்களின் உதவிக்கு செல்ல வேண்டும்.

வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியதால், மாநிலத்தின் பொருளதார நிலை சீர்குலைந்ததாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களே கூறுகின்றனர்; அக்கட்சிக்குள்ளேயே குழப்பம் உள்ளது.

வரும் 12ம் தேதியன்று, ம.ஜ.த., மகளிர் மாநாடு நடத்தி, எங்கள் சக்தியை காட்டுவோம். பெங்களூரு நகர ம.ஜ.த., தலைவர் ரமேஷ் கவுடா, ஜி.பி.ஏ., தேர்தலில் 40 இடங்களில் வெற்றி பெறுவோம் என, கூறியுள்ளார். ஜி.பி.ஏ., தேர்தல் மட்டுமின்றி, மாவட்ட, தாலுகா தேர்தலிலும் பெண்களின் சக்தியை காட்ட வேண்டும். எனவே மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம்.

ம.ஜ.த., இளைஞர் பிரிவு தலைவர் நிகில் குமாரசாமி, 60 முதல் 65 தொகுதிகளில் கட்சியை பலப்படுத்தியுள்ளார். அவர் தேர்தலில் தோற்றாலும், தன் அனுபவத்தை அரசியல் ரீதியில் பயன்படுத்துகிறார்.

மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமியின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இல்லை. எனக்கும் மூட்டு வலியை தவிர, எந்த ஆரோக்கிய பிரச்னையும் இல்லை. குமாரசாமியும் மாநில சுற்றுப்பயணம் செய்து, கட்சியை பலப்படுத்துவார்.

ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி, மாநிலத்தின் கிராமம் மற்றும் நகர பகுதிகளில், தன் செல்வாக்கை விஸ்தரிக்க திட்டம் வகுத்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us