/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தில்... ஆர்வமில்லை!: எதிர்ப்புகள் வலுத்ததால் பின்வாங்கிய ஜி.பி.ஏ., தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தில்... ஆர்வமில்லை!: எதிர்ப்புகள் வலுத்ததால் பின்வாங்கிய ஜி.பி.ஏ.,
தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தில்... ஆர்வமில்லை!: எதிர்ப்புகள் வலுத்ததால் பின்வாங்கிய ஜி.பி.ஏ.,
தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தில்... ஆர்வமில்லை!: எதிர்ப்புகள் வலுத்ததால் பின்வாங்கிய ஜி.பி.ஏ.,
தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தில்... ஆர்வமில்லை!: எதிர்ப்புகள் வலுத்ததால் பின்வாங்கிய ஜி.பி.ஏ.,
ADDED : செப் 24, 2025 11:14 PM

பெங்களூரு: பெங்களூரின் தெரு நாய்களுக்கு, சிக்கன் ரைஸ் வழங்கும் திட்டத்துக்கு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரில் தெரு நாய்களால், பொது மக்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில சாலைகளில் நாய்களின் தொல்லை, மிகவும் அதிகம். நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த உதாரணங்கள் உள்ளன. சிறார்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் என, பலரும் நாய்க்கடிக்கு ஆளாகின்றனர்.
தெருநாய்களின் தொந்தரவுக்கு தீர்வு காணும்படி, பொதுமக்கள் மன்றாடுகின்றனர். ஆனால் இதுவரை மாநகராட்சி அதிகாரிகளால் நிரந்தரத் தீர்வு காண முடியவில்லை.
நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, இன விருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதனால் திட்டம் முழுமையடையவில்லை.
நாய்களுக்கு சரியான உணவு கிடைக்காத காரணத்தால், மக்களை அவை தாக்குவதாக கருத்து எழுந்தது. எனவே நாய்களுக்கு சிக்கன் ரைஸ் தயாரித்து வழங்க, பெங்களூரு மாநகராட்சி சில மாதங்களுக்கு முன் திட்டம் வகுத்தது. நகரில் 2.79 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. இவற்றில் 5,000 நாய்களுக்கு மட்டும் சிக்கன் உணவு வழங்க, தினமும் ஒரு நாய்க்கு தலா 22.42 ரூபாய் செலவிட மாநகராட்சி தயாரானது. இந்த திட்டத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
பெங்களூரில் உணவு கிடைக்காமல், மக்கள் பலரும் அவதிப்படுகின்றனர். இத்தகைய நிலையில் நாய்களுக்கு சிக்கன் உணவு வழங்கும் திட்டம் சர்ச்சைக்குள்ளானது. மக்களின் வரிப்பணத்தில் நாய்களுக்கு உணவா; அது மட்டுமின்றி வெறும் 5,000 நாய்களுக்கு மட்டும், சிக்கன் உணவு வழங்குவது சரியல்ல. மற்ற நாய்கள் என்ன பாவம் செய்தன என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
எதிர்ப்பை பொருட்படுத்தாமல், திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் தயாராகினர்; டெண்டர் அழைத்தனர். டெண்டர் முடிவு செய்ய, மாநகராட்சி கால்நடை பிரிவு, தலைமை கமிஷனரிடம் வேண்டுகோள் விடுத்தது. அவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதற்கிடையே பெங்களூரு மாநகராட்சி, கிரேட்டர் பெங்களூரு ஆணையமாக மாறியது. ஜி.பி.ஏ., அதிகாரிகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, ஜி.பி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரு மாநகராட்சியாக இருந்தபோது, தெரு நாய்களுக்கு சிக்கன் ரைஸ் வழங்கும் திட்டம் வகுக்கப்பட்டது. ஜூலையில் டெண்டர் அழைக்கப்பட்டது. ஆகஸ்டில் ஒப்பந்ததாரர்களை முடிவு செய்து, மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அனுமதி அளிக்கவிலை.
பெங்களூரு மாநகராட்சி, தற்போது ஜி.பி.ஏ.,வாக மாறியுள்ளது. டெண்டர் தொடர்பான கோப்புகள், புதிதாக அமைக்கப்பட்ட மாநகராட்சிகளுக்கு அனுப்பப்படும். திட்டத்தை செயல்படுத்துவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம், அந்தந்த மாநகராட்சிகளின் கமிஷனர்களுக்கு இருக்கும். அவர்கள் அடுத்த கட்ட முடிவை எடுப்பர். எனவே தற்போதைக்கு திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.