Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் ஆலங்கட்டி மழை

பெங்களூரில் ஆலங்கட்டி மழை

பெங்களூரில் ஆலங்கட்டி மழை

பெங்களூரில் ஆலங்கட்டி மழை

ADDED : மே 13, 2025 11:57 PM


Google News
பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கன மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் மின்னல் தாக்கி, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கன மழை பெய்தது. பெங்களூரில் தனிசந்திரா, கல்யாண் நகர், பானஸ்வாடி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதை பார்த்த சிறுவர்கள் குதுாகலமடைந்து, அதை கையில் எடுத்து மகிழ்ந்தனர்.

மெஜஸ்டிக், மல்லேஸ்வரம், ராஜாஜி நகர், யஷ்வந்த்பூர், ரேஸ் கோர்ஸ் சாலை, ஆனந்தராவ் சதுக்கம், மேக்ரி சதுக்கம், விதான் சவுதா, சிவானந்தா சதுக்கம், கே.ஆர்., சதுக்கங்களிலும்; மாரத்தஹள்ளி மேம்பாலத்தில் இருந்து கார்த்திக் நகர் வரையிலும்; எலஹங்காவில் இருந்து குந்தலஹள்ளி வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மான்யதா டெக் பூங்கா அருகில் உள்ள சாலையில் தேங்கிய மழைநீர், பஸ்சிற்குள்ளும் புகுந்தது. டபுள் ரோடு சாலையில் நெரிசல் ஏற்பட்டது. இரு சக்கர வாகன ஓட்டிகள், பஸ் நிறுத்தங்களில் தஞ்சம் புகுந்தனர்.

ராமமூர்த்தி நகர், புரூக்பீல்டு, பெலகெரே, நாராயணசாமி லே - அவுட், சித்தாபுரா, பனத்துார் உட்பட பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதில் கார்கள், இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சில இடங்களில் மழைநீருடன், கழிவு நீரும் புகுந்தது. இதனால் இரவு முழுதும் மக்கள் துாங்காமல் தண்ணீரை வெளியேற்றி வண்ணம் இருந்தனர்.

இதுபோன்று பீதர், பாகல்கோட், தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, துமகூரு, ஹாசன், சாம்ராஜ்நகர், குடகு, மைசூரு, கோலார் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், 30 - 40 கி.மீ., வேகத்தில் காற்றும் வீசியது.

5 பேர் பலி


பல்லாரி மாவட்டம், சிருகுப்பாவின் ராரவி கிராமத்தில், நேற்று விவசாய பணிக்கு சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை பீரப்பா, 45, மகன் சுனில், 26, ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். அவருடன் மற்றொரு மகன், பலத்த காயங்களுடன் சிருகுப்பா தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாவட்டத்தில் உள்ள ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நகரின் பல பகுதிகளில் சாலைகளில் மழைவெள்ளம் ஓடியது. மாவட்ட கலெக்டர் அலுவலகம், தபால் நிலையம், தாலுகா அலுவலகம், பள்ளி, கல்லுாரி வளாகங்களில் மழைநீர் தேங்கியது. இதுபோன்று கொப்பால், விஜயபுரா, ராய்ச்சூரிலும் தலா ஒருவர் என மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

வீடு சேதம்


உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவின் ஹர்வாடாவில் விட்டல் சீதாராம் நாயக், கீதா நாராயண் கார்வி ஆகியோரின் வீடுகள் மின்னல் தாக்கியதில் சேதமடைந்தது. வீட்டில் இருந்த மின்சார மீட்டர் போர்டு, டைல்ஸ், மின்சார விளக்கு, மின் பொருட்கள் சேதம் அடைந்தன. வீட்டின் முன் இருந்த தென்னை மரத்திலும் மின்னல் தாக்கியது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us