Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அம்பிகரா சவுடையா சிலை சேதம் 'கோலி' சமூகத்தினர் போராட்டம்

அம்பிகரா சவுடையா சிலை சேதம் 'கோலி' சமூகத்தினர் போராட்டம்

அம்பிகரா சவுடையா சிலை சேதம் 'கோலி' சமூகத்தினர் போராட்டம்

அம்பிகரா சவுடையா சிலை சேதம் 'கோலி' சமூகத்தினர் போராட்டம்

ADDED : அக் 11, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
கலபுரகி: சமூக சீர்திருத்தவாதி அம்பிகரா சவுடையாவின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதைக் கண்டித்து, 'கோலி' சமூகத்தினர் போராட்டம் நடத்தியதால் கலபுரகியில் பதற்றம் ஏற்பட்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த மாவட்டம் கலபுரகி. இந்த மாவட்டத்தில் உள்ள முத்தகா கிராமத்தில் சமூக சீர்திருத்தவாதி அம்பிகரா சவுடையாவின் சிமென்ட் சிலை உள்ளது.

இந்த சிலையின் கைப் பகுதியை நேற்று முன்தினம் இரவு சேதப்படுத்தப்பட்டது. சிலையின் முகத்தில் மாட்டு சாணமும் வீசப்பட்டிருந்தது.

இதை நேற்று காலை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல், அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது.

இதையடுத்து, பன்கூர் கிராஸ் அருகே நேற்று காலை 'கோலி' சமூகத்தினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்யக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் டயர்களை தீ வைத்து எரித்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

தீவிரம் இதனிடையே 'கோலி' சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களான ஷரணப்பா தலவார், அவன்னா மக்கேரி, பசவராஜா சிப்பன்ன கவுடா, பசவராஜா பூதிஹாலா, சிவகுமார் தலவார் ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்தது.

அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க ஷாஹாபாத் டி.எஸ்.பி., சங்கர் கவுடா பாட்டீல், சித்தாபூர் சி.பி.ஐ., சந்திரசேகர் திகாடி மற்றும் பல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர்.

சிலையை சேதப்படுத்தியவர்களை விரைந்து கைது செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து கல புரகி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான பிரியங்க் கார்கே கூறியதாவது:

கடந்த 12ம் நுாற்றாண்டை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதியான அம்பிகரா சவுடையாவின் சிலை சேதப்படுத்தப்பட்டது, ஒரு இழிவான செயல். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உள்ளேன்.

மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். அம்பிகரா சவுடையா ஒரு சிறந்த எழுத்தாளர். அவரது சிலை அவமதிக்கப்பட்டது, நம் புகழ்பெற்ற பாரம்பரியத்திற்கு அவமானம். இதை அரசு பொறுத்துக் கொள்ளாது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய சிலை வேண்டும்! இந்த ஆண்டு முத்தகா கிராமத்தில் நிறுவப்பட்ட அம்பிகரா சவுடையாவின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இது 'கோலி' சமூகத்தின் மீதான நேரடியான தாக்குதலாகும். இதற்கு காரணமான சமூக விரோதிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அதே இடத்தில் மாவட்ட நிர்வாகம் புதிய சிலையை நிறுவ வேண்டும். தலவார் சாபண்ணா, பா.ஜ., - எம்.எல்.சி.,






      Our Apps Available On




      Dinamalar

      Follow us