Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தொகுதி வளர்ச்சிக்கு நிதி வழங்கவில்லை எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி

தொகுதி வளர்ச்சிக்கு நிதி வழங்கவில்லை எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி

தொகுதி வளர்ச்சிக்கு நிதி வழங்கவில்லை எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி

தொகுதி வளர்ச்சிக்கு நிதி வழங்கவில்லை எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி

ADDED : அக் 16, 2025 05:13 AM


Google News
பெங்களூரு: கிராமப்புறங்களில் மழையால் சேதமடைந்த சாலைகள், பாலங்களை சீரமைக்க, தலா 10 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்து, 11 மாதங்களாகியும் நிதி ஒதுக்கீடு செய்யாததால், எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கடந்த 2024ம் ஆண்டு பெய்த மழையால், கிராமங்களின் சாலைகள் பாழாகின. பாலங்கள், சாக்கடைகள் சேதமடைந்தன. இவற்றை சீரமைக்க நிதியுதவி வழங்கும்படி, எம்.எல்.ஏ.,க்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் சித்தராமையா, கிராமப்புறதொகுதிகளின் 189 எம்.எல்.ஏ.,க்களுக்கு, தலா 10 கோடி ரூபாய் அறிவித்தார்.

மேற்கொள்ளும் பணிகள் குறித்து, திட்ட அறிக்கை தயாரித்து, அனுப்பும்படி நிதித்துறை உத்தரவிட்டிருந்தது. எம்.எல்.ஏ.,க்களும் நிதித்துறை நிர்ணயித்திருந்த காலக்கெடுவுக்குள் திட்ட அறிக்கை தயாரித்து, நவம்பரிலேயே தாக்கல் செய்தனர்.

கே.ஆர்.ஐ.டி.எல்., எனும் கர்நாடக கிராமிய சாலை மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு ஆணையத்திடம், பணிகளை ஒப்படைக்கும்படி, பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசு செய்திருந்தனர்.

ஒப்பந்ததாரர்களை நியமித்து, பணிகளை கே.ஆர்.ஐ.டி.எல்., மேற்கொள்வது வழக்கம். மொத்த பணிகளின் தொகையில், 33 சதவீதம் தொகையை முன்பணமாக, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு அரசு அறிவித்த, 10 கோடி நிதியுதவி இதுவரை வழங்கப்படவில்லை.

இதன் விளைவாக ஒப்பந்ததாரர்களுக்கு முன்பணம் வழங்கப்படவில்லை. முன்பணமே கைக்கு கிடைக்காததால், பணிகளை ஏற்க ஒப்பந்ததாரர்கள் முன்வரவில்லை.

எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்திருந்த திட்ட அறிக்கைகள், துாசி படிந்து கிடக்கின்றன. தொகுதிகளில் புதிதாக பணிகளும் நடக்கவில்லை. சாலை, சாக்கடை, பாலங்கள் சீரமைப்புக்கு, அரசு அறிவித்த நிதியுதவி, வெறும் காகித அளவில் உள்ளது என, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே முணுமுணுக்கின்றனர்.

பணிகளை துவக்க நிதியுதவி வழங்கும்படி, எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். இம்முறை மழைக்காலத்திலும், பல மாவட்டங்களில் வழக்கத்தை விட, அதிகமான மழை பெய்துள்ளது. இப்போதும் சாலைகள், பாலங்கள், சாக்கடைகள் பாழாகியுள்ளன.

அவற்றை சீரமைக்க பணம் இல்லாமல், எம்.எல்.ஏ.,க்கள் கையை பிசைகின்றனர். தொகுதி மக்களிடம் தலை காட்ட முடியவில்லை என, புலம்புகின்றனர்.

வெற்று அறிவிப்பு கடந்தாண்டு கிராமப்புற எம்.எல்.ஏ.,க்களுக்கு, தலா 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக, அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நடப்பாண்டு ஆளுங்கட்சியினருக்கு தலா 50 கோடி ரூபாயும், எதிர்க்கட்சியினருக்கு தலா 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும் முதல்வர் சித்தராமையா அறிவித்தார். ஆனால் அதையும் வழங்கவில்லை. - சுனில்குமார், எம்.எல்.ஏ., - பா.ஜ.,






      Our Apps Available On




      Dinamalar

      Follow us