/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அட போங்கப்பா! பெங்களூரில் மோசமான சாலைகளால் விரக்தி; வெளியேறப்போவதாக முன்னணி நிறுவனம் அறிவிப்பு அட போங்கப்பா! பெங்களூரில் மோசமான சாலைகளால் விரக்தி; வெளியேறப்போவதாக முன்னணி நிறுவனம் அறிவிப்பு
அட போங்கப்பா! பெங்களூரில் மோசமான சாலைகளால் விரக்தி; வெளியேறப்போவதாக முன்னணி நிறுவனம் அறிவிப்பு
அட போங்கப்பா! பெங்களூரில் மோசமான சாலைகளால் விரக்தி; வெளியேறப்போவதாக முன்னணி நிறுவனம் அறிவிப்பு
அட போங்கப்பா! பெங்களூரில் மோசமான சாலைகளால் விரக்தி; வெளியேறப்போவதாக முன்னணி நிறுவனம் அறிவிப்பு
ADDED : செப் 18, 2025 07:50 AM

பெங்களூரு: மோசமான சாலைகளால் விரக்தி அடைந்துள்ள 'பிளாக்பக்' என்ற முன்னணி நிறுவனம், பெங்களூரை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து ஏராளமான தொழிலதிபர்களும் மோசமான சாலைகள் விஷயத்தில், காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் தலைநகராக உள்ள பெங்களூருக்கு, சர்வதேச கவன ஈர்ப்பு உள்ளது. இங்கிருக்கும் சீதோஷ்ண நிலையால் முன்னணி ஐ.டி., நிறுவனங்கள் இங்கே தொழில் தொடங்கின. இதனால் 'சிலிகான் சிட்டி' என்ற பெருமை கிடைத்தது. தவிர பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக பெங்களூரு விளங்குகிறது.
பொருளாதார சக்தி மாநிலத்தின் 2024 - 25 நிதியாண்டிற்கான ஜி.டி.பி., எனும் மாநில உள்நாட்டு உற்பத்தி தோராயமாக 28.84 லட்சம் கோடி ரூபாய். முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், 12.8 சதவீத வளர்ச்சியுடன் நாட்டிலேயே மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்குகிறது.
நடப்பு நிதி ஆண்டில் மாநிலத்தின் ஜி.டி.பி., 30.70 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் நிலவும் சாதகமான சூழ்நிலை மற்றும் தொழிலதிபர்களின் கருத்துக்களால் 2021 முதல் 2024 வரை 12 லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடுகளை கர்நாடகா ஈர்த்துள்ளதாக, சிறு, குறு தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் சமீபத்தில் கூறியது.
இதை வைத்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மார்தட்டிக் கொண்டது.
ஆனால் இதற்கெல்லாம் 'வேட்டு' வைக்கும் விதமாக நேற்று முன்தினம் 'பிளாக்பக்' என்ற முன்னணி நிறுவனத்தின் சி.இ.ஓ., ராஜேஷ் யபாஷி, தன் 'எக்ஸ்' பக்கத்தில், 'கடந்த ஒன்பது ஆண்டுகளாக பெல்லந்துார் பகுதியில் எங்கள் அலுவலகம், வீடு இருக்கிறது.
ஆனால் தற்போது இங்கே தொடர்வது மிகவும் கடினம். நாங்கள் இங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம்.'
'இதற்கு காரணம் எங்கள் அலுவலகம் முன் செல்லும், வெளிவட்ட சாலையின் மோசமான நிலை. இந்த சாலை பள்ளங்கள், துாசிகளால் நிறைந்துள்ளது. சக ஊழியர்களின் சராசரி பயணம் ஒரு வழி பாதையில் தினமும் ஒன்றரை மணி நேரமாக அதிகரித்துள்ளது. சாலையை சரி செய்வர் என்ற நம்பிக்கை குறைவாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த மாற்றத்தையும் காணவில்லை' என, ராஜேஷ் பதிவிட்டுள்ளார்.
நிர்வாக தோல்வி இந்த பதிவு, வைரலான நிலையில், ராஜேஷ் யபாஷியின் கருத்துக்கு பல தொழிலதிபர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பல முன்னணி ஐ.டி., நிறுவனங் களில் பணியாற்றியவரும், தொழில் அதிபருமான மோகன்தாஸ் பை அளித்த பேட்டி:
சாலைப் பள்ளங்களால் ஊழியர்கள் பிரச்னைகளை சந்திக்கின்றனர். பிளாக்பக் நிறுவனம் பெங்களூரை விட்டு வெளியேற முடிவு செய்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
இது அரசின் நிர்வாக தோல்வியின் அறிகுறியாகும். அந்த நிறுவனத்தில் 4,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். வெளிவட்ட சாலையில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் மட்டும் 8 லட்சம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சரான துணை முதல்வர் சிவகுமார் தயவு செய்து, சாலை பிரச்னையை கவனிக்கவும்.
வெளிவட்ட சாலையில் இருந்து நிறுவனங்கள் வெளியேறுகின்றன. தயவு செய்து இந்த பிரச்னையில் தலையிடுங்கள்.
துணை முதல்வர் சிவகுமாரை ஒன்றரை மாதத்திற்கு முன்பு சந்தித்தேன். வெளிவட்ட சாலையில் சாலை பிரச்னைக்கு தீர்வு காண, சில யோசனைகள் கூறினேன்.
'அனைத்தையும் செய்கிறேன்' என்றார். ஆனால் நடவடிக்கை எடுத்ததுபோல் தெரியவில்லை.
சாலைப் பள்ளங்களை மூடுவது பெரிய விஷயமே இல்லை. இந்த விஷயத்தில் ஐ.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவும் கவனம் செலுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன.
சாலைப் பள்ளம் விஷயத்தில் காங்கிரஸ், பா.ஜ., அரசியல் செய்கின்றன. இருவரும் 'லுாட்டி' அடிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.
கிரேட்டர் பெங்களூரு ஆணைய கமிஷனர் மகேஸ்வர ராவ் திறமையான அதிகாரி. அவரை வேலை செய்யவிடாமல் சிலர் கையை கட்டி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அச்சம் தன் 'எக்ஸ்' பக்கத்தில் பயோகான் நிறுவன உரிமையாளர் கிரண் மஜும்தார் ஷா வெளியிட்ட பதிவில், துணை முதல்வர் சிவகுமாரை தன் 'டேக்' செய்து, 'இது கடுமையான பிரச்னை. இதை தீர்க்க அவசர நடவடிக்கை தேவை' என, குறிப்பிட்டுள்ளார்.
சாலைப் பள்ளங்களால் ஐ.டி., உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்திருப்பது, சித்தராமையா அரசை பதற்றமடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நகரில் சாலைப் பள்ளங்களை சரி செய்யவும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் 1,100 கோடி ரூபாயை அரசு ஒதுக்கிய சில நாட்களிலேயே அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மாநிலத்திற்கு வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம், ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.