Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பள்ளிகளுக்கு அக்., 18 வரை விடுமுறை; ஜாதிவாரி சர்வேயால் மாணவர்களுக்கு ஜாலி

பள்ளிகளுக்கு அக்., 18 வரை விடுமுறை; ஜாதிவாரி சர்வேயால் மாணவர்களுக்கு ஜாலி

பள்ளிகளுக்கு அக்., 18 வரை விடுமுறை; ஜாதிவாரி சர்வேயால் மாணவர்களுக்கு ஜாலி

பள்ளிகளுக்கு அக்., 18 வரை விடுமுறை; ஜாதிவாரி சர்வேயால் மாணவர்களுக்கு ஜாலி

ADDED : அக் 08, 2025 09:04 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : கர்நாடகாவில், ஜாதிவாரி சர்வே பணிகள் இன்னும் முடிவடையாததால், வரும் 18ம் தேதி வரை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கர்நாடகாவில், ஜாதிவாரி சர்வேயை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நடத்தி வருகிறது. இப்பணிகள் கடந்த மாதம் 22ம் தேதி முதல் இம்மாதம் 7ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த சர்வேயில் ஆசிரியர்கள், ஆஷா ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்புக்கு மத்தியிலும், சர்வே தொடர்ந்து நடந்து வந்தது. இருப்பினும், பல்வேறு இடையூறுகளால் முழுமையாக முடியவில்லை.

முடியவில்லை இது குறித்து, முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:

கடந்த மாதம் 22ம் தேதி, ஜாதிவாரி சர்வேயை மாநில அரசு துவங்கியது. இம்மாதம் 7ம் தேதி பணிகளை முடிக்கலாம் என முடிவு செய்திருந்தோம். ஆனால், சில மாவட்டங்களில் பணிகள் முடிவடையவில்லை.

இது குறித்து கல்வி துறை, பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இந்த சர்வேயில் 1.60 லட்சம் ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இதில், 1.20 லட்சம் பேர் ஆசிரியர்கள். தொலைத் தொடர்பு பிரச்னை போன்றவற்றால் குறிப்பிட்ட காலத்திற்குள் சர்வேயை முடிக்க இயலவில்லை.

எனவே, சர்வேயை நடத்த காங்., - எம்.எல்.சி., புட்டண்ணா, ஆசிரியர் சங்கத்தினர் கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தனர். இவர்களின் கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டது.

இதன்படி மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வரும் 18ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆசிரியர்கள் சர்வேயில் ஈடுபடுத்தப்படுவர்.

பி.யு., இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடக்க உள்ளதால், பி.யு., கல்லுாரி ஆசிரியர்களுக்கு சர்வேயில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

உறுதியளிப்பு பெங்களூரில் சர்வே தாமதமாக துவங்கியதால், வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரில், 46 லட்சம் வீடுகள் உள்ளன.

இங்கு, 6,700 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுவர். ஒரு நாளைக்கு 10 முதல் 15 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 19ம் தேதிக்குள் சர்வேவை முடிப்போம் என ஆசிரியர்களும் உறுதியளித்து உள்ளனர். பெங்களூரில் ஏற்கனவே 40 சதவீத பணிகள் முடிந்துவிட்டன.

இந்த சர்வேயில் பங்கேற்காதவர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். அதே சமயம் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு பணிநாட்களின் போது எட்டு விடுமுறை எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.

சர்வேயின் போது உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்துக்கு தலா, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

சர்வே பணியில் யாரேனும் இறந்தாலும் அவர்களின் குடும்பத்துக்கும், தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். சர்வேயில் பங்கேற்பவர்களுக்கு ஊதியமாக தலா, 20,000 ரூபாய் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் ஜாதிவாரி சர்வேயை முடிக்க வேண்டும் என்பதால், ஆசிரியர்கள் பதற்றத்தில் உள்ளனர். அதே சமயம், ஏற்கனவே 10 நாட்கள் தசரா விடுமுறையில் இருந்த மாணவர்களுக்கு, மேலும் 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் சந்தோஷத்தில் திளைக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us