Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மகிஷாசுரன் சிலை பகுதியில் 144 தடை

மகிஷாசுரன் சிலை பகுதியில் 144 தடை

மகிஷாசுரன் சிலை பகுதியில் 144 தடை

மகிஷாசுரன் சிலை பகுதியில் 144 தடை

ADDED : செப் 25, 2025 06:48 AM


Google News
மைசூரு: மைசூரு சாமுண்டி மலையில் உள்ள மகிஷாசுரன் சிலையை சுற்றிலும் இன்று காலை 6:00 மணி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தசராவையொட்டி, மகிஷா தசரா துணை கமிட்டி சார்பில் சாமுண்டி மலையில் உள்ள மகிஷாசுரன் சிலைக்கு, இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு சில ஹிந்து அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தசரா விழாவுக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்பதற்காக நேற்று முன்தினம் இரவு முதல் இன்று காலை 6:00 மணி வரை, மகிஷாசுரன் சிலையை சுற்றி, 200 மீட்டருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் கூறுகையில், ''மகிஷாசுரன் சிலையை சுற்றிலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சிலையை சுற்றி கூட்டம் கூட கூடாது, ஐந்து பேருக்கு மேல் ஒன்றாக செல்லக்கூடாது, ஆயுதங்களை ஏந்தியபடி நடக்கக் கூடாது, கோஷங்கள் எழுப்பக் கூடாது, ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தக்கூடாது. இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

இதையடுத்து, மைசூரு டவுன் ஹாலில் மகிஷாசூரனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் தலித் சங்கங்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

டவுன் ஹாலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்ததற்கு தலித் சங்கத்தினர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட பலர் அதிருப்தி தெரிவித்து, 'மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் மீது வழக்கு தொடருவோம்' என்றனர்.

இதுபற்றி அறிந்த அதிகாரிகள், 'இரவு நேரத்தில் சென்று மாலை அணிவிக்கலாம்' என்றனர். அதற்கும் தலித் சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, மாலையில் விழா ஏற்பாட்டாளர்கள் ஐந்து பேரை மட்டும் மலைக்கு அழைத்துச் சென்று, மகிஷாசுரனுக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கப்பட்டது. முன்னதாக, மகிஷாசுரன் சிலையை சுற்றிலும் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டிருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us