Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அடுக்குமாடி கட்டுமானத்தில் கிடந்த எலும்புக்கூடு அடையாளம் தெரிந்தது

அடுக்குமாடி கட்டுமானத்தில் கிடந்த எலும்புக்கூடு அடையாளம் தெரிந்தது

அடுக்குமாடி கட்டுமானத்தில் கிடந்த எலும்புக்கூடு அடையாளம் தெரிந்தது

அடுக்குமாடி கட்டுமானத்தில் கிடந்த எலும்புக்கூடு அடையாளம் தெரிந்தது

ADDED : அக் 14, 2025 04:42 AM


Google News
பெங்களூரு: அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு, 'பல் செட்' உதவியுடன் அடையாளம் காணப்பட்டது.

பெங்களூரின், கொத்தனுாரில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. கட்டடம் தொடர்பாக, வழக்கு இருந்ததால், 10 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

வழக்கு முடிந்ததால், மீண்டும் பணிகளை துவக்க உரிமையாளர் ஸ்ரீதர் முடிவு செய்தார். அக்டோபர் 4ல், தொழிலாளர்களுடன் கட்டடத்தை சுத்தம் செய்தார்.

நான்காம் மாடியில் தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது, மனித எலும்புக்கூடு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், உரிமையாளர் ஸ்ரீதரிடம் தெரிவித்தனர். அவரும் உடனடியாக கொத்தனுார் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் வந்து, எலும்புக்கூட்டை மீட்டனர். முதற்கட்ட ஆய்வில் அது ஆணின் எலும்புக்கூடு என்பது தெரிந்தது. இதை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினர். எலும்புக்கூடு இருந்த இடத்தில், 'பல் செட்' ஒன்று கிடைத்தது.

அதை கொண்டு விசாரித்தபோது, 2020ல் அம்பேத்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நபருடையது என்பது தெரிந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். 2023ல் காணாமல் போனவர்கள் பற்றிய தகவலை சேகரித்தனர்.

அப்போது ஆவலஹள்ளியை சேர்ந்த சோமய்யா, 59, காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் காணாமல் போனது குறித்து, மகன் கிரண்குமார் புகார் அளித்திருந்தார். எலும்புக்கூடு கிடந்த இடத்தில், 'ஸ்டைல் யூனியன் பிராண்ட் டி ஷர்ட்' மற்றும் 'பாரகன்' செருப்பும் கிடைத்தது.

சோமய்யா காணாமல் போன அன்று அணிந்திருந்த உடை, செருப்பு இதே போன்றவை என தெரிந்ததால், கிரண்குமாரை வரவழைத்து பொருட்களை காட்டினர். அவரும் தன் தந்தையுடையது என்பதை உறுதி செய்தார். அதன்பின் எலும்புக்கூடை அவரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

வீட்டில் இருந்து காணாமல் போன சோமய்யா, கட்டுமான கட்டடத்தின் 4வது மாடிக்கு எப்படி வந்தார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us