Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தீபாவளிக்கு 411 கடைகளுக்கு தற்காலிக உரிமம் பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் தகவல்

தீபாவளிக்கு 411 கடைகளுக்கு தற்காலிக உரிமம் பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் தகவல்

தீபாவளிக்கு 411 கடைகளுக்கு தற்காலிக உரிமம் பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் தகவல்

தீபாவளிக்கு 411 கடைகளுக்கு தற்காலிக உரிமம் பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் தகவல்

ADDED : அக் 07, 2025 05:00 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: தீபாவளியை முன்னிட்டு, கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் மைதானங்களில் பட்டாசு விற்பனை செய்வதற்கு 411 தற்காலிக உரிமங்கள் வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அத்திபள்ளியில் பட்டாசு விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். நான்கு வாகனங்கள் நாசமடைந்தன.

இதையடுத்து, பட்டாசு விற்பனை செய்வது தொடர்பாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் சீமந்த் குமார் சிங் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் அதிகாரிகள், தீ மற்றும் அவசர சேவை, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பெஸ்காம், சரக்கு சேவை வரி துறை, சமூக ஆர்வலர்கள், பட்டாசு கடை விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது நகர கமிஷனர் சீமந்த் குமார் பேசியதாவது:

பட்டாசு விற்பனை செய்ய ஜி.பி.ஏ.,வுக்கு உட்பட்ட 87 மைதானங்களில், 411 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி தரப்படும். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இதன் உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்படும்.

பட்டாசு விற்பனை செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட மைதானங்களின் பெயர்கள், நகர போலீசில் https://bcp.karnataka.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

கர்நாடக அரசின் 2019 அக்., 15ம் தேதியிட்ட உத்தரவின்படி, பட்டாசு விற்பனை கடை வைப்பவர்கள், தேவையான ஆவணங்கள், 'டிடி' சமர்ப்பித்து, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பட்டாசுகளை அக்., 18 முதல் 22ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய தற்காலிக உரிமம் வழங்கப்படும்.

தற்காலிக கடைகள் வைப்பதற்கான விண்ணப்பங்களை, வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் https://https://sevasindhugs.karnataka.gov.in/ அல்லது பெங்களூரு ஒன் மையங்களில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5,000 ரூபாயை, ஆன்லைனில் செலுத்த வேண்டும். 25 ஆயிரம் ரூபாய்க்கான 'டிடி'யை, 'கமிஷனர் ஆப் போலீஸ், பெங்களூரு சிட்டி' என்ற பெயரில் எடுக்க வேண்டும். உரிமம் கிடைக்கவில்லை என்றால், அவர்களின் பணம் திரும்ப அளிக்கப்படும். டிடி நகலை கண்டிப்பாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதுபோன்று, 6,400 ரூபாய்க்கான 'டிடி'யை, 'டி.ஜி.பி., மற்றும் டி.ஜி., கர்நாடக தீ மற்றும் அவசர சேவை, பெங்களூரு' என்ற பெயரில் எடுக்க வேண்டும்.

அனுமதி கிடைக்கவில்லை என்றால், பணம் திருப்பி தரப்படும். இதற்கான டிடி நகல், ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். தீ பாதுகாப்பு, தீயை அணைப்பது குறித்தும் கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தற்காலிக உரிமத்துக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்களின் கடையின் ஜி.எஸ்.டி., எண் அல்லது தற்காலிக ஜி.எஸ்.டி., எண்ணை, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்காலிக பட்டாசு கடையில் தீ விபத்து அல்லது அசம்பாவிதம் ஏற்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us