ADDED : ஜூன் 10, 2026 02:55 AM
இதுக்கு போய் அலட்டிக்கலாமா?
போ லீஸ் பயிற்சி நிலையம், அம்பேத்கர் நினைவு அறிவரங்கம், தொழிற் பூங்கா எல்லாமே, 'கோல்ப்' மைதானம் ஒட்டி இருக்கும் இடத்தில் தான் ஏற்படுத்த போறாங்க. கோல்ப் விளையாட்டு வீரர்கள் எங்க மைதானத்தை விட்டு கொடுக்க மாட்டோம்னு நீதிமன்றம் போயிருக்காங்க.
மா.அரசு திட்டத்துக்கு ம.அரசு சம்மதம் வாங்கிட்டாங்களா. ஏற்கனவே பூ கட்சிக்கும், கை கட்சிக்கும் ஏழாம் பொருத்தம். தொழில் தொடங்க வர்றவங்க உள்நாடா, வெளிநாடா, இவங்களுக்கு ம.அரசு தயவு தேவைப்படாதா. சுற்றுச்சூழல் அனுமதி, போதிய மின் சக்தி, உட்பட உள் கட்டமைப்புக்கு ஏற்றதை யாரிடம் பெறுவது.
தொழிலதிபர்கள் வந்து செல்ல ஹெலிபேட் வசதியோடு வி.வி.ஐ.பி., கெஸ்ட் ஹவுஸ் கூட கட்டப் போறாங்களாம். ஆய்வு பணிகளுக்கும் பூமி பூஜைகளுக்கும், அதன் அறிவிப்பு களுக்கும் குறைபாடே இல்லை. இதுக்கு போய் அலட்டிக்கலமா.
இது நிஜமா?
எ ப்படியாவது மந்திரி நாற்காலி கிடைக்க வேணும்னு நான்கு லேடி அசெம்பிளிக்காரர்களில் பெலகாவி, கோல்டு சிட்டி ரெண்டு பேருக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
ஆனால், கோல்டு சிட்டியில் அசெம்பிளிக் காரருக்கு பினாமி காட்டும் அலப்பறை அந்த ஒரு தொகுதியில் தாங்க முடியாமல் கட்சிக்காரங்களே ஒதுங்கி ஓடுறாங்க.
இன்னும் மந்திரி ஆகிவிட்டால் பினாமி அதிகாரத்தை தாங்க முடியுமா. முதல்வரே நிம்மதியாக துாங்க முடியுமா என்று அசெம்பிளிக்காரரின் ரத்த உறவே மேலிடம் வரை வேட்டு வெச்சதா சொல்றாங்க. அதனால் தான் கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போச்சாமே... இது நிஜமா.
பங்கு பரிவர்த்தனையா?
இ ண்டஸ்ட்ரியல் டவுன்ஷிப் அமைக்க இது வரைக்கும் எத்தனை பேருக்கு தொழில் தொடங்க இடம் வழங்கப்பட்டது என்ற விபரம் இதுவரை செங்கோட்டை புல்லுக்கட்டுக்காரருக்கு தெரியாதாம்.
அவரின்றி, 'பெர்மிஷன்' எதுவும் கிடைக்காது. அவர் தடையேதும் விதிக்காமல் பார்த்துக்கொள்ள, அவருக்கு உரிய பங்கு குறித்து, 'டாப் லெவல்'ல பஞ்சாயத்தும் நடக்குதாம். இதில் அசெம்பிளிகாரரின் பினாமி நேரடியாக தலையிட்டுள்ளதாக சொல்றாங்க.
கை கட்சிக்குள் விபரம் தெரிந்தவங்களே இதை நகர்வலம் நடத்தி வராங்க. ஏற்கனவே, புல் மார்க்கெட் இடத்தில் உருவாகும் வணிக வளாகத்துக்கு தனியார் வங்கியிடத்தில் 80 சி கடன் கேட்டு இருக்காங்க. இதை வழங்க அந்த நிலத்தையே முதலீடாக வைத்து கடன் கேட்பதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனால், இதற்கு அரசின் அனுமதி மிக முக்கியம் என்பதால் வங்கி நிர்வாகம் கடன் கொடுக்காமல் சாக்கு போக்கு சொல்லி காலம் கடத்தி வராங்க. ஏற்கனவே, கூட்டுறவு வங்கியில் கடன் திரட்டுவதில், கெட்டிக்காரரானவர் இந்த கடன் பெறும் நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடுவதால், எப்படியாவது கடன் கிடைத்து விடும் என்று நம்பிக்கையில் இருக்காங்க. விரைவில் இதன் கட்டுமானப் பணிகள் துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்குள் நடத்தி முடிக்க போறாங்களாம்.
'லிப்ட்' வசதி அமையுமா?
கோ ல்டு சிட்டி தொகுதியின் குட்டஹள்ளியில் உள்ள பங்காரு திருப்பதியில், லிப்ட் வசதி ஏற்பாடு செய்ய பூமி பூஜை நடத்தினாங்க. அந்த பூஜை நடத்தினதையே மறந்துட்டாங்களோ.
ஏன், எதற்கு மெத்தனம். இதுக்காக ஒதுக்கிய நிதியை வேறொரு திட்டத்துக்கு மாற்றிட்டாங்களா அல்லது நிதியே ஒதுக்கவில்லையா. இக்கோவிலுக்கு ஒரு நிர்வாக குழுவையும் ஏற்படுத்தினாங்க. அதில் கிராமத்து கை கட்சியின் பக்தர்களை மட்டுமே இதில் இடம் பெற செய்தாங்க.
ஆனால், இதில் நகர பகுதியின் பக்தர்கள் ஒருவரும் இடம்பெற வில்லை. நகரில் இதற்கு தகுதியானவங்க ஒருத்தரும் கிடைக்கலயா. கோவில் பேரில் எதுக்கு பாலிடிக்ஸ். தில்லுமுல்லு நடத்த வேறு யாருமே தேவையில்லையான்னு மாற்றுக்கட்சிக்காரங்க கூடி கூடி பேசுறாங்க.





