முதல்வரது மனநிலை சரியில்லை: அசோக்
முதல்வரது மனநிலை சரியில்லை: அசோக்
முதல்வரது மனநிலை சரியில்லை: அசோக்
ADDED : ஜூன் 12, 2025 11:05 PM

மைசூரு: “முதல்வர் சித்தராமையாவின் மனநிலை சரியில்லை,” என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கிண்டல் செய்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டு கால ஆட்சிக்கு, முதல்வர் சித்தராமையா ஜீரோ மதிப்பெண் கொடுத்துள்ளார். அவர் கொடுக்கும் மதிப்பெண்கள் யாருக்கு தேவை? ஆறு மாதத்தில் பதவியை விட்டு விலகும், அவரது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவை இல்லை.
சின்னசாமி மைதானம் முன் கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த வழக்கில், சித்தராமையா தினமும் ஒன்று பேசி வருகிறார். அவரது மனநிலை சரியில்லை. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பரமேஸ்வர் அவரது வீட்டிற்கு மட்டுமே உள்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 11 ஆண்டுகள் பிரதமராக மோடி உள்ளார். மத்திய அமைச்சர்கள் யாராவது, நான் தான் அடுத்த பிரதமர் என்று கூறி உள்ளனரா?
ஆனால், இங்கு முதல்வர் நாற்காலியை சுற்றி நிறைய பேர் உள்ளனர். துணை முதல்வர் சிவகுமார் சூனியம் செய்து, முதல்வர் பதவியை பிடிக்க நினைக்கிறார். இவ்வளவு மோசமான அரசு எப்போது கவிழும் என்று, மாநில மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கூட்ட நெரிசல் வழக்கு குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு நான் கடிதம் எழுதி உள்ளேன். இந்த சம்பவத்தில் மனித உரிமை மீறல் தெளிவாக தெரிகிறது. ஆணையத்தினர் கர்நாடகா வந்து விசாரிக்க வேண்டும். அதிகாரிகளை பலிகடா ஆக்க அரசு முயற்சிக்கிறது. நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின் போதும், அதிகாரிகள் மீது பழிபோட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.