Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆதரவற்றோர் உடல்களை தகனம் செய்யும் சுதாராணி

ஆதரவற்றோர் உடல்களை தகனம் செய்யும் சுதாராணி

ஆதரவற்றோர் உடல்களை தகனம் செய்யும் சுதாராணி

ஆதரவற்றோர் உடல்களை தகனம் செய்யும் சுதாராணி

ADDED : அக் 12, 2025 10:13 PM


Google News
Latest Tamil News
பொதுவாக சுடுகாடு என்றாலே, மனிதர்களுக்குள் இனம் புரியாத பயம் இருக்கும். ஆண்களே இரவு நேரத்தில் செல்ல தயங்கும், அந்த இடத்தில் ஒரு பெண் தங்கியிருந்து, உடல்களை தகனம் செய்ய முடியுமா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு பெண் உள்ளார்.

4,000 உடல்கள் தாவணகெரே டவுன் பி.பி., சாலையில் உள்ளது வைகுந்த தகன கூடம். இங்கு வரும் உடல்களை தகனம் செய்யும் பணியில், பத்து ஆண்டுகளாக ஈடுபடுகிறார் சுதாராணி. இதுவரை 4,000 க்கு மேற்பட்ட உடல்களை தகனம் செய்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

எனது சொந்த ஊர் தாவணகெரே மாய கொண்டா தொட்ட மாகடி கிராமம். விஜயபுராவின் சித்தராமேஸ்வர சுவாமியை திருமணம் செய்துள்ளேன். திருமணத்திற்குப் பின் தாவணகெரே வந்தோம். இங்குள்ள வைகுந்த அறக்கட்டளையில் மேலாளராக வேலைக்கு சேர்ந்தேன். இந்த அறக்கட்டளை சார்பில் செயல்படும் தகன மேடையில் இறந்தவர்கள் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வந்தன. நாட்கள் செல்ல செல்ல இறந்தோரின் உடல்களை தகனம் செய்யும் பணியில் ஈடுபட ஆரம்பித்தேன்.

முதலில் இங்கு வேலை செய்தவர்கள், உடல்களை தகனம் செய்யும்போது மது அருந்துவர். இறந்த உடல்களை மதிக்காமல், தகனம் செய்வர். நான் வந்த பின், அந்த நிலை மாறியது. ஆதரவற்றோர் இல்லங்களில் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வந்து தகனம் செய்துள்ளேன்.

துங்கபத்ரா கொரோனா நேரத்தில் தகன மேடையில் பல உடல்களை எரியூட்டி உள்ளேன். உறவினர்கள் கூட இறந்தவர்கள் உடலின் அருகே வர தயங்குவர். சம்பிரதாய முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதை நானே முன் நின்று செய்துள்ளேன்.

முதலில் இந்த பணிக்கு வந்தபோது பயமாக இருந்தது. முதல் நான்கு உடல்களை தகனம் செய்த பின், இந்த வேலை எனக்கு பழகிவிட்டது. கொரோனா நேரத்தில் தினமும் 10 முதல் 15 உடல்களை தகனம் செய்துள்ளேன்.

ஒரு பெண்ணாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதை பாக்கியமாக கருதுகிறேன். உடல்கள் முழுதும் எரியும் வரை அருகிலேயே காத்திருந்து சாம்பலை எடுத்து, இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு கொடுக்கிறேன். பெரும்பாலான உடல்களின் அஸ்தியை துங்கபத்ரா ஆற்றில் கரைத்துள்ளேன்.

போராட்டம் உடல்களை தகனம் செய்வது எளிதான விஷயம் இல்லை. நெருப்பின் முன் மணிக்கணக்கில் நிற்க வேண்டும். இறந்த உடல் எரிந்து சாம்பல் ஆவதை உறுதி செய்ய வேண்டும். இறந்த உடல் மீது நெருப்பு மூட்டியதும் ஒரு மணி நேரம் கழித்து உடலை மரக்கட்டை வைத்து திருப்பி விட வேண்டும்.

இங்கு, உடலை தகனம் செய்யும் பணியில் தற்போது நான் மட்டுமே ஈடுபடுகிறேன். கொரோனா நேரத்தில் உடல்களை தகனம் செய்ய நிறைய போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us