ADDED : செப் 25, 2025 11:06 PM

தொல்பொருள் அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரிய துறை, சுற்றுலா துறை இணைந்து நேற்று 'பாரம்பரிய சைக்கிள் சவாரி' ஊர்வலம் நடத்தியது.
இதில் பங்கேற்றவர்களுக்கு 'நமது பாரம்பரியம் நமது பெருமை' என்று அச்சிடப்பட்டிருந்த டி ஷர்ட்கள் வழங்கப்பட்டன.
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்த மைசூரை சேர்ந்த நவீன் சவுலங்கி, ரங்காச்சார்லு டவுன் ஹால் முன், நேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, 3,758 கி.மீ., துாரத்தை, 10 நாட்கள் 15 மணி நேரத்தில் சைக்கிளில் பயணித்தது பெருமை அளிக்கிறது. உடலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் சைக்கிள் ஓட்டுவதில் பயிற்சி செய்யுங்கள். இதற்கு மைசூரு சிறந்த இடமாகும்,'' என்றார்.
மைசூரு ரங்காச்சார்லு டவுன் ஹாலில் இருந்து புறப்பட்டு தொட்ட கெடிகாரா, சாமராஜேந்திர சதுக்கம், அரண்மனை, நால்வடி கிருஷ்ணராஜ உடையார் சதுக்கம், லான்ஸ்டவுன் கட்டடம், ஜெகன் மோகன் அரண்மனை, பரகலா மடம், வணிக வரி அலுவலகம், கிராபோர்டு ஹால், மெட்ரோபோல் சதுக்கம், ரயில் நிலையம், கே.ஆர்., மருத்துவமனை சதுக்கம், சாமராஜேந்திர தொழில்நுட்ப நிறுவனம், காவேரி எம்போரியம், காந்தி சதுக்கம் வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வந்தது.
அந்தந்த கட்டடங்கள் முன் நிறுத்தப்பட்டு, அதன் பெருமைகள், வரலாறு, கட்டடக்கலை குறித்து வரலாற்று ஆசிரியர்களான பேராசிரியர் டாக்டர் செல்வபிள்ளை அய்யங்கார், ஓய்வு பெற்ற பேராசிரியர் ரங்கநாத் விளக்கினர்.
பாரம்பரிய சுற்றுலாவை ஒட்டி, சைக்கிளில் பயணித்த மக்கள்.