Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ டிச., 14க்கு பின் விஜயபுரா, ஹூப்பள்ளி சிறப்பு ரயில்கள் நிரந்தரம்

டிச., 14க்கு பின் விஜயபுரா, ஹூப்பள்ளி சிறப்பு ரயில்கள் நிரந்தரம்

டிச., 14க்கு பின் விஜயபுரா, ஹூப்பள்ளி சிறப்பு ரயில்கள் நிரந்தரம்

டிச., 14க்கு பின் விஜயபுரா, ஹூப்பள்ளி சிறப்பு ரயில்கள் நிரந்தரம்

ADDED : அக் 18, 2025 04:44 AM


Google News
பெங்களூரு: யஷ்வந்த்பூரில் இருந்து ஹொஸ்பேட், விஜயபுரா, பெங்களூரில் இருந்து ஹூப்பள்ளிக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள், டிசம்பர் 14ம் தேதிக்கு பின் வழக்கமான ரயில்களாக மாற்றப்பட்டுகின்றன.

'சிறப்பு ரயில்' இயக்கினால் பயணியர் ஆதரவு கிடைக்கிறதா என்பதை சோதிக்க, மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு குறிப்பிட்ட வழித்தடத்தில் ரயில் இயக்கப்படும். இந்த ரயில்களில், டிக்கெட் கட்டணம் மற்ற ரயில்களை விட, 30 சதவீதம் அதிகமாக இருக்கும்.

இவ்வாறு இயக்கப்படும் வழித்தடத்தில் பயணியர் வரவேற்பு உள்ளதா என்பதை ரயில்வே வாரியம் ஆய்வு செய்யும். எதிர்பார்த்தபடி பயணியர் எண்ணிக்கை கூடவில்லை என்றால், சிறப்பு ரயில் ரத்து செய்யப்படும். அதுவே வரவேற்பு அதிகரித்தால், ஆறு மாதங்களுக்கு பின், அதை வழக்கமான ரயிலாக மாற்றி தொடர்ந்து இயக்கப்படும்.

அதன்படி, மறைந்த சுரேஷ் அங்கடி, மத்திய ரயில்வே இணை அமைச்சராக இருந்தபோது, 2019ல் யஷ்வந்த்பூர் - ஹொஸ்பேட் - விஜயபுரா மற்றும் பெங்களூரு - ஹூப்பள்ளி இடையே ஆறு மாதங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

கொரோனாவுக்கு பின்னரும், இந்த சிறப்பு ரயில்கள் வழக்கமான ரயில்களாக மாற்றப்படாமல் இயங்கி வந்தன. மக்கள் ஆதரவு இருந்தும் ஆறு ஆண்டுகளாக கூடுதலாக 30 சதவீத கட்டணம் அதிகமாக செலுத்தி, பயணியர் பயணம் செய்து வந்தனர்.

இது தொடர்பான தகவல், சமீபத்தில் ரயில்வே வாரியத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து, யஷ்வந்த்பூர் - ஹொஸ்பேட் - விஜயபுரா மற்றும் பெங்களூரு - ஹூப்பள்ளி சிறப்பு ரயில்களை, டிசம்பர் 14ம் தேதிக்கு பின், வழக்கமான ரயில்களாக மாற்றி இயக்கும்படி, தென்மேற்கு ரயில்வேக்கு ஒப்புதல் அளித்தது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளி கோட்டத்திற்குள், டி.ஓ.டி., எனும் தேவைக்கு ஏற்ப, 20 சிறப்பு ரயில்கள் இயங்கப்பட்டு வருகின்றன.

பூஜ்ஜியம் என்று துவங்கும் எண்களை கொண்ட அனைத்து ரயில்களும் சிறப்பு ரயில்களாகும். இந்த சிறப்பு ரயில்களை, சாதாரண ரயில்களாக மாற்ற, ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

யஷ்வந்த்பூர் - விஜயபுரா சிறப்பு ரயில் உட்பட சில டி.ஓ.டி., ரயில்களை, வழக்கமான ரயில்களாக மாற்ற, ரயில்வே வாரியம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, இன்னும் சில நாட்களில் வெளியாகும். அது வழக்கமான ரயிலாக மாறும்போது, மக்கள் இன்னும் பயனடைவர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us