ADDED : ஜூன் 29, 2026 02:12 AM

நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை நேரடியாக எடுத்துக்கொள்ளாமல், மூன்றாம் தரப்பினர் வாயிலாக எடுத்துக்கொள்வதையே 'நெகிழ்வான பணியமர்த்துதல்' அதாவது 'ப்ளெக்ஸி ஸ்டாபிங்' என்று அழைக்கிறோம். இந்தியாவில் இது போல பல நிறுவனங்கள், 65க்கு மேற்பட்ட துறைகளில் இத்தகைய தற்காலிக பணியாளர்களை வழங்கி வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் முறைசார்ந்த வேலைவாய்ப்புகளின் வாயிலாக, 3.5 கோடி புதிய வேலைகள் உருவாகியுள்ளன. இதில் 'ப்ளெக்ஸி ஸ்டாபிங்' வாயிலாக மட்டுமே 2024 - 25 வரை கிட்டத்தட்ட 65 லட்சத்துக்கு மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய 'ப்ளெக்ஸி ஸ்டாபிங்' நிறுவனங்களின் ஒருங்கிணைந்த அமைப்பாக இருப்பது 'இந்தியன் ஸ்டாபிங் பெடரேஷன்.' இந்த கூட்டமைப்பு, தங்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.,யை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தக் கூட்டமைப்பின் தலைவர் மன்மீத் சிங், நமது நிருபரிடம் பேசினார்:
* ஏன் ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும் என்று கோருகிறீர்கள்?
எங்களது துறை மட்டுமே கிட்டத்தட்ட 30,568 கோடி ரூபாயை ஜி.எஸ்.டி.,யாக செலுத்தி வருகிறது. இன்றைக்கு மாறிவரும் சூழலை கருத்தில் கொள்ளும் போது, இது மிக பெரிய தொகை. இதனால், பல நிறுவனங்கள் முறையான ஆளெடுப்பை தவிர்த்து, வேறு வழிகளில் இடங்களை நிரப்புகின்றனர். இதனால், அவர்கள் தங்கள் செலவுகளை குறைத்துக் கொள்வதாக நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு தரமற்ற பணியாளர்களே கிடைக்கிறார்கள். அரசுக்கும் தொடர்ச்சியான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டுமென்றால், ஜி.எஸ்.டி., விகிதத்தை குறைப்பதே சரியான வழிமுறையாக இருக்கும்.
* ஜி.எஸ்.டி., குறைப்பினால், உங்களுக்குத் தானே பலன். ஆளெடுக்கும் நிறுவனங்களுக்கு என்ன பலன்?
உண்மையில் நிறுவனங்களுக்கு தான் பலன். அதாவது, அவர்களுக்கு தரமான நபர்கள் தேவைப்படுகின்றனர். அதேசமயம், பணியாளர்களுடைய செலவுகளை அவர்களால் நிர்வகிக்க முடியவில்லை. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும் முடியவில்லை. இந்நிலையில், 'ப்ளெக்ஸி ஸ்டாபிங்' முறையில் அவர்கள் ஆளெடுக்கின்றனர். தேவைப்பட்ட போது, எவ்வளவு பேரை வேண்டுமானாலும் எங்களால் உடனடியாக திரட்டி தர முடியும்.
நாங்கள் வழங்கும் சேவைகளுக்காக விதிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி.,யானது 5 சதவீதமாக குறையும் போது, கிட்டத்தட்ட 13 சதவீத தொகை நிறுவனங்களுக்கு மிச்சமாகும். அதைக் கொண்டு, அவர்கள் மேன்மேலும் புதிய பணியாளர்களை எடுக்க முடியும். அல்லது வேறு முதலீடுகளுக்கு அந்த தொகையை பயன்படுத்த முடியும்.
* பணியாளர்களுக்கு இதனால் என்ன பலன்?
பணியாளர்களுடைய அடிப்படை தேவையே நிரந்தர தன்மை தான். பல நிறுவனங்களால் அதை உறுதி செய்ய முடியாத சூழலில், நாங்கள் குறைந்தபட்ச பாதுகாப்புகளை ஏற்படுத்தி தருகிறோம். பி.எப்., - இ.எஸ்.ஐ., உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த திட்டங்களில் அவர்களை சேர்த்து, நிகழ் காலத்துக்கும், எதிர் காலத்துக்கும் தேவையான பாதுகாப்பை உருவாக்க முடிகிறது. ஜி.எஸ்.டி., விகிதம் குறைக்கப்படும் போது, இத்தகைய பணியாளர்களை அதிக அளவில் எடுப்பதற்கு பெரிய வாய்ப்பு ஏற்படும்.
இதன் வாயிலாக, வேலைதேடி வரும் எண்ணற்ற படித்த இளைஞர்களை உடனடியாக பணியமர்த்தவும் முடியும்.
* உங்கள் கோரிக்கையை எந்தெந்த மாநிலங்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளன?
மகாராஷ்டிரா ஏற்றுக்கொண்டு இருக்கிறது. பல்வேறு மாநிலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. தொழில்துறையில் தமிழகம் முன்னிலை வகித்து வருவதால், இங்குள்ள புதிய அரசும் எங்களுடைய கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம். இதன் வாயிலாக, நிறுவனங்களுடைய செலவுகள் குறையும்; ஆளெடுப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
