உங்களது அனைத்து நிதி சார்ந்த திட்டங்களுக்கும்... இங்கே அனுகவும்!
உங்களது அனைத்து நிதி சார்ந்த திட்டங்களுக்கும்... இங்கே அனுகவும்!
UPDATED : மே 13, 2023 06:20 PM
ADDED : மே 13, 2023 06:18 PM

தனி நபரோ அல்லது குடும்பமோ நிதி திட்டமிடல் முக்கியமானது. அது திகட்டாத இன்பத்தை நிச்சயம் வழங்கும். நிதித் திட்டம் உங்கள் இலக்குகளை அடைய ஒரு ரோட்மேப்பை உருவாக்க உதவும். அதற்கு மத்திய அரசு நிறுவனமான செபியின் கால்குலேட்டர்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நிதித் திட்டம் இருக்கும்போது நாம் எங்கு நிற்கிறோம், இலக்குகளை அடைய என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரியும். இது உங்கள் நிதி குறித்த மன அழுத்தத்தையும் கவலையையும் குறைக்க உதவும். எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கிறோம் என்பது நமக்கு மன நிம்மதியைத் தரும். நிதித் திட்டத்தை உருவாக்க தற்போது இணையதளம் மூலம் பல சோர்ஸ்கள் உள்ளன. அவற்றின் எளிமையானது, முக்கியமானது செபி வழங்கும் கால்குலேட்டர்கள்.
investor.sebi.gov.in/calculators/index.html இந்த இணைப்பின் கீழ் செபி ஆனது முதலீட்டாளர்களுக்கு பணம் சார்ந்த கணக்குகளை போட பல கால்குலேட்டர்களை வழங்குவது. ஈ.எம்.ஐ., கால்குலேட்டர், முதலீட்டிற்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை அறிய ஒரு கால்குலேட்டர், ஓய்வூதிய வருவாய்க்கு திட்டமிட ஒரு கால்குலேட்டர், தற்போதைய பணத்திற்கு எதிர்கால மதிப்பைத் தெரிந்துகொள்ள கால்குலேட்டர், கூட்டுவட்டி பற்றி அறிய, ஆயுள் காப்பீடு, முதலீட்டைத் தாமதப்படுத்துவதால் நாம் இழப்பதை அறிய, விஷுவல் கோல் பிளானர், பாண்ட் ஈல்டு கால்குலேட்டர் என பல கால்குலேட்டர்கள் உள்ளன.
உதாரணத்திற்கு நீங்கள் 10 லட்ச ரூபாய் கடன் வாங்க உள்ளீர்கள். 5 ஆண்டுக்குள் திரும்பிக் கட்ட இலக்கு நிர்ணயிக்கிறீர்கள். அதற்கு 11% வட்டி. எவ்வளவு நாம் மாதம் ஈ.எம்.ஐ., கட்ட வேண்டி இருக்கும் என அறிய விரும்பினால், இதிலுள்ள ஈ.எம்.ஐ., கால்குலேட்டர் சென்று மேற்கூறிய தகவல்களை அளித்தால், மாத ஈ.எம்.ஐ., ரூ.21,742 என காட்டும். நீங்கள் ரூ.40 ஆயிரம் சம்பளம் பெறுகிறீர்கள் எனில் கடன் தொகையை குறைத்துக் கொள்வது நல்லது என முடிவு செய்யலாம். இவ்வாறு பல கால்குலேட்டர்களை பயன்படுத்தி திட்டமிடலாம்.
அதே காஸ்ட் டிலே என்று ஒரு கால்குலேட்டர் உள்ளது. அதில் நீங்கள் முதலீட்டை தாமதப்படுத்துவதால் ஆண்டுக்கு எவ்வளவு கூடுதலாக செலவழிக்க வேண்டும் என காட்டும். உங்களுக்கு வயது 30 என கொள்வோம். ஓய்வு பெறும் வயது 60. தற்போது மாதச் செலவு ரூ.20 ஆயிரம் ஆகிறது என வைத்துக் கொண்டால், இந்த கால்குலேட்டரைப் பயன்படுத்தி அடுத்த 30 ஆண்டுகளுக்கு பிறகு மாதம் எவ்வளவு செலவுக்கு தேவைப்படும். அதற்கு இந்த 30 ஆண்டுகளில் மாதம் சேமித்திருக்க வேண்டிய தொகை எவ்வளவு. அதனை 31 வயது, 32 வயது என தள்ளிப்போட்டுக் கொண்டே சென்றால் மாதம் எவ்வளவு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என புட்டு புட்டு வைக்கும்.

