/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ தனியார் துறை உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் சற்று குறைந்தது தனியார் துறை உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் சற்று குறைந்தது
தனியார் துறை உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் சற்று குறைந்தது
தனியார் துறை உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் சற்று குறைந்தது
தனியார் துறை உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் சற்று குறைந்தது
ADDED : செப் 24, 2025 01:30 AM

புதுடில்லி:நாட்டின் தனியார் துறை உற்பத்தி வளர்ச்சி, இம்மாதம் சற்று குறைந்துள்ளதாக எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மாதந்தோறும் வெளியிடப்படும் பிளாஷ் பி.எம்.ஐ., குறியீட்டின் இம்மாதத்துக்கான தரவுகளில், புதிய ஆர்டர்கள், உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி ஆர்டர்கள் அனைத்துமே கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆகஸ்டில் 63.20 புள்ளிகளாக இருந்த பி.எம்.ஐ., கூட்டு குறியீடு, இம்மாதம் 61.90 புள்ளிகளாக குறைந்துள்ளது.
அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், வளர்ச்சி சற்று குறைந்திருந்தாலும், நாட்டின் தயாரிப்பு மற்றும் சேவைகள் துறைகள் தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே பயணித்து வருகின்றன.
இந்திய பொருட்களின் இறக்குமதி மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக புதிய சரக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் சற்று குறைந்துள்ளன. வரி விதிப்பு அமலாவதற்கு முன்பு, நடப்பாண்டு துவக்கத்திலிருந்தே அதிகளவிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு மாதங்களாக உள்நாட்டு ஆர்டர்கள் வலுவாக அதிகரித்துள்ளன. ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு இதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பின் தாக்கத்தை, ஜி.எஸ்.டி., குறைப்பு சற்று ஈடுசெய்துள்ளது என்றே கூற வேண்டும்.
எதிர்கால கண்ணோட்டத்தை பொறுத்தவரை, நிறுவனங்கள் உற்பத்தி வளர்ச்சி குறித்து மிகுந்த நம்பிக்கையுடனேயே உள்ளன. அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தின.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.