Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பங்குகளை அடமானம் வைத்து ரூ.1 கோடி வரை கடன் பெறலாம் :வட்டியில் மாற்றமில்லை: ஆர்.பி.ஐ.,

பங்குகளை அடமானம் வைத்து ரூ.1 கோடி வரை கடன் பெறலாம் :வட்டியில் மாற்றமில்லை: ஆர்.பி.ஐ.,

பங்குகளை அடமானம் வைத்து ரூ.1 கோடி வரை கடன் பெறலாம் :வட்டியில் மாற்றமில்லை: ஆர்.பி.ஐ.,

பங்குகளை அடமானம் வைத்து ரூ.1 கோடி வரை கடன் பெறலாம் :வட்டியில் மாற்றமில்லை: ஆர்.பி.ஐ.,

ADDED : அக் 02, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
மும்பை : ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, நிறுவனங்கள் இணைப்பு மற்றும் கையகப்படுத்தலுக்கு கடன், பங்குகள் மதிப்பில் அடமானக் கடன் வழங்க அனுமதிக்கப்பட்டு

உள்ளது.

ஆர்.பி.ஐ., கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில், மும்பையில், கடந்த 29ம் தேதி துவங்கி நேற்று வரை தொடர்ந்து மூன்று நாட்களாக பணக்கொள்கை குழு கூட்டம் நடந்தது. இதில், வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படாமல் 5.50 சதவீதமாக பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.

கடன் வரம்பு அதிகரிப்பு

மேலும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மல்ஹோத்ரா கூறியதாவது:

பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் வரம்பை அதிகரிக்கவும், விதிமுறைகளை எளிதாக்கவும் ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது.

இதன்படி பங்குகளை அடமானம் வைத்து கடன் பெறும் உச்ச வரம்பை தற்போதுள்ள 20 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பிக்க வழங்கப்படும் கடன் வரம்பை 10 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சில்லரை முதலீட்டாளர்கள் குறிப்பாக அதிக சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்தல்களுக்கு கடன் வழங்க உள்நாட்டு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது நாள் வரை வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் தனியார் பங்கு நிறுவனங்கள் மட்டுமே இதற்கு கடன் வழங்க அனுமதி உள்ளது.

தொழில்துறையினரிடம் கருத்து கேட்ட பின், இதுதொடர்பாக விரைவில் இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும்.

ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு கரன்சியில் ஈட்டும் வருவாயை ஒரு மாதத்துக்குள்ளாக இறக்குமதிகளுக்கு பயன்படுத்த வேண்டும் அல்லது திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

இந்த காலக்கெடுவை மூன்று மாதங்களாக நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலவச டிஜிட்டல் சேவை

குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பு பராமரிக்க அவசியமில்லாத வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், இனி டிஜிட்டல் வங்கி சேவை இலவசமாக வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த கணக்குகளுக்கு வழங்கப்படும் சேவைகளையும் விரிவுபடுத்தியுள்ளது.

ரூபாய் உலகமயமாக்கல்

எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளில் ரூபாயின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பூடான், நேபாளம் மற்றும் இலங்கையில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முடிவுகள்:

* ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாகவே தொடரும்

* நடப்பு நிதியாண்டுக்கான ஜி.டி.பி., வளர்ச்சி கணிப்பு 6.50 சதவீதத்திலிருந்து 6.80 சதவீதமாக அதிகரிப்பு

* பணவீக்க கணிப்பு 3.10 சதவீதத்திலிருந்து 2.60 சதவீதமாக குறைப்பு

* பணவீக்கம் மற்றும் வளர்ச்சியில் ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்

* அமெரிக்க வரி விதிப்பால் நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்படும்

* சேவைகள் துறையின் வலுவான ஏற்றுமதி மற்றும் தாயகத்துக்கு பணம் அனுப்புவது தொடர்ந்து அதிகரிப்பதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை பராமரிக்கக் கூடிய அளவிலேயே இருக்கும்

* அன்னிய செலாவணி கையிருப்பு 61.62 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அடுத்த 11 மாத இறக்குமதிக்கு போதுமானது

* அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் அதிகப்படியான ஏற்ற இறக்கங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை

* அடுத்த பண கொள்கை குழு கூட்டம் டிசம்பர் 3 - 5ம் தேதி வரை நடைபெறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us