காற்று மாசுபாட்டால் பறிபோன 81 லட்சம் உயிர்கள்: வெளியான "ஷாக்" ரிப்போர்ட்
காற்று மாசுபாட்டால் பறிபோன 81 லட்சம் உயிர்கள்: வெளியான "ஷாக்" ரிப்போர்ட்
காற்று மாசுபாட்டால் பறிபோன 81 லட்சம் உயிர்கள்: வெளியான "ஷாக்" ரிப்போர்ட்
ADDED : ஜூன் 19, 2024 04:10 PM

புதுடில்லி: கடந்த 2021ம் ஆண்டு காற்று மாசுபாடு காரணமாக, 81 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
காற்று மாசுபாடு குறித்து, ஹெல்த் எபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (எச்.இ.ஐ) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் அமைப்பு சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021ம் ஆண்டு காற்று மாசுபாடு காரணமாக, 81 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியா, சீனாவில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மட்டும் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், நைஜீரியாவில் 1,14,100 பேரும், பாகிஸ்தானில் 68,100 பேரும், எத்தியோப்பியா 31,100 பேரும், வங்காளதேசம் 19,100 பேரும் உயிரிழந்துள்ளனர்.
காற்று மாசுபாடு
மொத்தமாக இந்தியாவில் 21 லட்சம் மற்றும் சீனாவில் 23 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு தான் அதிக உயிரிழப்புகள் நடந்துள்ளது. தெற்கு ஆசியாவில் இறப்புக்கான முக்கிய காரணமாக காற்று மாசுபாடு உள்ளது. ரத்த அழுத்தம், உணவு சரியாக சாப்பிடாமல் இருப்பது மற்றும் புகையிலைகள் உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளது.
பாக்.,ல் 2 லட்சத்து 56 ஆயிரம் பேர்
மற்ற நாடுகளை பொறுத்தவரையில், பாகிஸ்தானில் 2 லட்சத்து 56 ஆயிரம் பேரும், வங்கதேசத்தில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 300 பேரும், மியான்மரில் 1 லட்சத்து ஆயிரத்து 600 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு ஆசியாவை பொறுத்தவரையில் இந்தோனேசியாவில் அதிகபட்சமாக 2 லட்சத்து 21 ஆயிரத்து 600 பேரும், வியட்நாமில் 99,700 பேரும், பிலிப்பைன்சில் 98,209 பேரும் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் 2,06,700 பேரும், எகிப்தில் 1,16,500 பேரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.