பஸ்களில் திருடிய 2 பெண்கள் கைது ரூ.80 லட்சம் தங்க நகைகள் மீட்பு
பஸ்களில் திருடிய 2 பெண்கள் கைது ரூ.80 லட்சம் தங்க நகைகள் மீட்பு
பஸ்களில் திருடிய 2 பெண்கள் கைது ரூ.80 லட்சம் தங்க நகைகள் மீட்பு
ADDED : ஜூலை 20, 2024 06:31 AM

பெங்களூரு: பி.எம்.டி.சி., பஸ்சில் பயணித்து, பெண் பயணியரிடம் கொள்ளையடித்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன.
சமீபத்தில் ஒரு பெண், தன் குடும்பத்துடன் வெளியூருக்கு செல்ல, பெங்களூரின், கே.ஆர்.புரம் நகைக்கடை முன் பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ் ஏறினர். அப்போது மர்ம நபர்கள், பெண்ணின் கவனத்தை திசை திருப்பி, பையில் இருந்த 156 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடினர். இது தொடர்பாக, கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்து, விசாரணையில் இறங்கிய போலீசார், பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு பெண்களின் அடையாளம் தெரிந்தது. இவர்கள் காந்திநகரின் லாட்ஜில் தங்கியிருப்பதை கண்டுபிடித்து, இருவரையும் விசாரித்த போது திருடியதை ஒப்பு கொண்டனர்.
அதன்பின் லாவண்யா, 28, மீனா, 30, கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி, 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான இரண்டு பெண்களும், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தின், குப்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடன் மேலும் பல பெண்கள் உள்ளனர். குப்பத்தில் இருந்து, மூன்று, நான்கு பேர் சேர்ந்து பெங்களூருக்கு வருவர். அதிக பயணியர் உள்ள பி.எம்.டி.சி., பஸ்களில் ஏறுவர்.
பெண் பயணியரின் கவனத்தை திசை திருப்பி, அவர்கள் பையில் வைத்துள்ள தங்க நகைகள், பணத்தை திருடிக்கொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி, ஆந்திராவுக்கு திரும்பி செல்வர்.
குப்பம் கேங்க் பெண்கள், பெங்களூரில் மட்டுமின்றி, துமகூரு, தாவணகெரே, சிராவிலும் தங்கள் கைவரிசையை காண்பித்தது, விசாரணையில் தெரிந்தது. இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
பஸ்களில் சக பயணியரை போன்று நடித்து, பெண்களின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகள், பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. பெண்கள் பஸ்களில் பயணிக்கும் போது, அதிக பணம், தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்களை கொண்டு செல்ல கூடாது. ஒருவேளை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால், கவனத்துடன் இருக்க வேண்டும்.
- தயானந்த்,
கமிஷனர், பெங்களூரு நகர்