அவசரநிலை அடக்குமுறைகள் ம.பி., பாட புத்தகத்தில் சேர்ப்பு
அவசரநிலை அடக்குமுறைகள் ம.பி., பாட புத்தகத்தில் சேர்ப்பு
அவசரநிலை அடக்குமுறைகள் ம.பி., பாட புத்தகத்தில் சேர்ப்பு
ADDED : ஜூன் 28, 2024 01:40 AM

போபால்: கடந்த, 1975 - 77 வரையிலான அவசரநிலை காலத்தில் நடந்த அடக்குமுறைகள், அதை எதிர்த்து போராடிய ஜனநாயக போராளிகள் குறித்து பள்ளி புத்தகங்களில் பாடங்கள் சேர்க்கப்பட உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது, 1975, ஜூன் 25ல், நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப் பட்டன.
நாடு முழுதும் பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 1977ல் அவசரநிலை முடிவுக்கு வந்தது.
இதன், 50ம் ஆண்டு நினைவு தினம் சமீபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி, ம.பி., முதல்வர் மோகன் யாதவ் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அவசரநிலை அடக்குமுறைகளை எதிர்த்து போராடிய ஜனநாயக போராளிகளுக்கு மாநில அரசு பல்வேறு சலுகைகளை அளிக்க முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுதும் உள்ள அரசு விருந்தினர் மாளிகை, சர்க்யூட் ஹவுஸ்களில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ள அவர்களுக்கு, கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடி கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
ஆயுஷ்மான் சுகாதார அட்டை வாயிலாக அவர்கள் பெறும் சிகிச்சைகளுக்கான செலவுகள் தாமதமின்றி உடனுக்குடன் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
தீவிர உடல்நலப் பிரச்னை உள்ளோருக்கு ஏர் - ஆம்புலன்ஸ் வசதி, 25 சதவீத தள்ளுபடியில் வழங்கப்படும்.
அரசு மரியாதையுடன் கூடிய இறுதி சடங்குக்கு வழங்கப்படும் தொகை 8,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
அவர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதோடு, சொந்த தொழில் துவங்க பயிற்சி அளிக்கப்படும்.
அவசர நிலை காலத்தின் போது ஜனநாயக போராளிகள் எதிர்கொண்ட அடக்குமுறைகளை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில், பள்ளி பாடப் புத்தகங்களில் அது குறித்த விரிவான பாடங்கள் சேர்க்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.