வங்கதேச எம்.பி.,யின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு
வங்கதேச எம்.பி.,யின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு
வங்கதேச எம்.பி.,யின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு
ADDED : ஜூன் 09, 2024 11:26 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், கொலை செய்யப்பட்ட வங்கதேச எம்.பி., அன்வருல் அசிம் அனாரின் உடல் பாகங்களை, மாநில சி.ஐ.டி., போலீசார் கண்டெடுத்தனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஹசீனா பிரதமராக உள்ளார். இவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி., அன்வருல் அசிம் அனார், 56, கடந்த மே 12ல், மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவுக்கு சிகிச்சைக்காக வந்தார்.
இவர், கோல்கட்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில், இந்த குடியிருப்பு, எம்.பி., அன்ருவல் அசிம் அனாரின் நெருங்கிய நண்பர் அக்தருஸ்ஸாமானுக்கு சொந்தமானது என்றும், அவர் கூலிப்படையினருக்கு 5 கோடி ரூபாய் கொடுத்து நண்பரை கொலை செய்ததும் தெரிய வந்தது.
அக்தருஸ்ஸாமான் அமெரிக்காவில் வசிக்கிறார். அவரை நாடு கடத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது சியாம் ஹுசைன் என்பவரை, நம் அண்டை நாடான நேபாள போலீசார், சமீபத்தில் கைது செய்து, மேற்கு வங்க போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இவரை, 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, மேற்கு வங்க சி.ஐ.டி., போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
முகமது சியாம் ஹுசைனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் கிருஷ்ணமதி கிராமத்தில் உள்ள பாக்ஜோலா கால்வாயின் தெற்கு கரையில், நேற்று மனித உடலின் எலும்புகள், பாகங்கள் உள்ளிட்டவற்றை, சி.ஐ.டி., போலீசார் கண்டெடுத்தனர்.
இவை, கொலை செய்யப்பட்ட அன்வருல் அசிம் அனாருடையதாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகித்து உள்ளனர். இவற்றை தடயவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து அன்ருவல் அசிம் அனாரின் மற்ற உடல் பாகங்களை தேடும் பணி நடக்கிறது.