விதை, உரம் வழங்குவதில் தட்டுப்பாடு முதல்வர் சித்தராமையா கடும் எச்சரிக்கை
விதை, உரம் வழங்குவதில் தட்டுப்பாடு முதல்வர் சித்தராமையா கடும் எச்சரிக்கை
விதை, உரம் வழங்குவதில் தட்டுப்பாடு முதல்வர் சித்தராமையா கடும் எச்சரிக்கை
ADDED : ஜூன் 23, 2024 06:31 AM

விஜயநகரா: ''விவசாயிகளுக்கு விதை, உரம் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது. விவசாயிகளிடம் இருந்து புகார் வந்தால், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அதிகாரிகளை, முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.
விஜயநகராவில் நேற்று முன் தினம் மாவட்ட முன்னேற்ற ஆய்வு கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது.
அப்போது அவர் பேசியதாவது:
மழை பெய்து வருவதால், விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஒருமுறை கொடுத்த விதை முளைக்கவில்லை என்றால், மீண்டும் விவசாயிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து புகார் வந்தால், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தண்ணீர், கால்நடைகளுக்கு தீவனம், நரேகா வேலை வாய்ப்பு எக்காரணம் கொண்டும் பாதிக்கக் கூடாது. நரேகா திட்டத்தின் கீழ், ஏரிகளில் உள்ள வண்டல் மண்ணை அகற்றி, ஏரிகளை சீரமையுங்கள்.
கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 10வது இடத்தில் இருந்து மாவட்டம், நடப்பாண்டு 27வது இடத்துக்கு சரிந்துள்ளது. இதற்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
இம்முறை 20 சதவீதம் கவுரவ மதிப்பெண் கொடுத்தும், வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான டி.டி.பி.ஐ., எனும் பொதுக் கல்வி துறை துணை இயக்குனர் மற்றும் பிளாக் கல்வி அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.