Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பொன்னகரில் தமிழ் பேசும் சோழர் கால கல்வெட்டுகள்

பொன்னகரில் தமிழ் பேசும் சோழர் கால கல்வெட்டுகள்

பொன்னகரில் தமிழ் பேசும் சோழர் கால கல்வெட்டுகள்

பொன்னகரில் தமிழ் பேசும் சோழர் கால கல்வெட்டுகள்

ADDED : ஜூலை 03, 2024 10:22 PM


Google News
Latest Tamil News
முத்தமிழ் மன்னர்களில் ஒருவரான சோழர் அரசாண்ட இடங்களில், குவலாளபுரம் என்ற பகுதியும் ஒன்று. இப்பகுதியில் தமிழ் மன்னர்கள் அமராபரணன், சீயகங்கன் ஆகிய சிற்றரசர்கள், சோழ பேரரசின் கீழ் ஆட்சி செய்துள்ளனர்.

சிற்றரசர்களுக்கு அறிவுரை வழங்குபவர்களில், புவியியல் வல்லுனரான பவணந்தி முனிவர் என்பவர் செயல்பட்டதாக தமிழின் நன்னுால் கல்வெட்டு குறிப்பு கூறுகிறது.

இந்த பவணந்தி முனிவர் தான் குவலாளபுரத்தில் தங்கம் விளையும் கனிமம் உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இந்த குவலாளபுரமே பிற்காலத்தில் கோலார் ஆனதெனவும் தங்கச் சுரங்கத் தொழிலுக்கு விதையிட்டவர் இவர் தான் எனவும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் ஆட்சியில் கட்டப்பட்ட கோவில்களில் தமிழர் வரலாற்றை உணர்த்தும் வகையில், பழந்தமிழ் கல்வெட்டுகள் காட்சி அளிக்கின்றன. தமிழர்கள் நிறைந்த, தங்கம் விளையும் தங்கவயலின் நான்கு திசைகளிலும் சோழராண்ட தமிழின் மண்வாசனை மாறவில்லை.

தங்கவயலின் கிழக்கே அழகிய சிறு கிராமமான கேசம்பள்ளியின் மடிவாளா பகுதியில் சோழ மன்னர்கள் ஆட்சியின் போது, கங்காதீஸ்வரர் கோவிலை நிறுவி, அதில் பழந்தமிழ் கல்வெட்டுகளை, தமிழர் வரலாற்றை பிரதிபலிக்க செய்துள்ளனர்.

தமிழர் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பும் சுற்றுலா பயணியருக்கு இது சிறந்த இடமாக விளங்குகிறது. தங்கவயலில் ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெற்ற பழமையான சிவாலயமான பால சோமேஸ்வரர் கோவிலும் சோழர் காலத்துக்கு உட்பட்டது. இது தங்கவயலின் உரிகம் பேட்டையில் உள்ளது.

ஆனால், ஏதோ ஒரு தீ விபத்து நடந்ததை சாக்காக வைத்து கோவிலை புதுப்பிப்பதாக தெரிவித்து, பழந்தமிழ் கல்வெட்டுகளை அகற்றியது போக, எஞ்சிய நான்கைந்து கல்வெட்டுகள் மட்டுமே தற்போது உள்ளன.

அதேபோல், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரிகுப்பம் சோமலிங்கேஸ்வரர் கோவிலிலும் பழந்தமிழ் கல்வெட்டுகள் இருந்தன. கோவிலை புதுப்பிக்கும் பணியால், அங்கு இருந்த தமிழ் கல்வெட்டுகள் மாயமாகியுள்ளன. இது, தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் கவனத்துக்கும் சென்றுள்ளது.

ஆனால், கேசம்பள்ளி அருகே உள்ள மடிவாளாவில் கங்காதீஸ்வரர் கோவிலில் பழந்தமிழ் கற்கள் பாழாகாமல் பாதுகாப்பாக உள்ளன. தமிழரின், தமிழின் வரலாற்றை, சோழர் ஆட்சியை, சிவ பக்தியை அறிய விரும்புவோர் மனதுக்கு ஏற்ற இடமாக உள்ளது.

சுற்றுலா பயணியர் வந்து பார்த்து பிரமிக்கின்றனர். இங்கு பழங்கால லிங்கேஸ்வரர், கணபதி சிலைகளும் உள்ளன. காவடி செலுத்த சுப்பிரமணியர் சுவாமிக்கு சிலையும் நிறுவி உள்ளனர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us