இலவச மது வழங்கியதால் எகிறிய கூட்டம் பா.ஜ., - எம்.பி., பாராட்டு விழாவில் சர்ச்சை
இலவச மது வழங்கியதால் எகிறிய கூட்டம் பா.ஜ., - எம்.பி., பாராட்டு விழாவில் சர்ச்சை
இலவச மது வழங்கியதால் எகிறிய கூட்டம் பா.ஜ., - எம்.பி., பாராட்டு விழாவில் சர்ச்சை
ADDED : ஜூலை 09, 2024 04:48 AM

நெலமங்களா ; லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., - எம்.பி., சுதாகருக்கு நடந்த பாராட்டு விழாவில், கட்சி தொண்டர்களுக்கு மதுபானம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் நடந்த லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாபூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் சுதாகர் 1.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு பாராட்டு விழா நடத்த, சிக்கபல்லாபூர் மாவட்ட பா.ஜ., - ம.ஜ.த.,வினர் முடிவு செய்தனர்.
இதற்காக, பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்களாவின் பாவிகெரே என்ற இடத்தில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடந்தது. இதில், 10,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்த பின், இதில் பங்கேற்ற தொண்டர்களுக்கு அசைவ உணவு, மது பானம் வழங்க தனித்தனி கவுன்டர்கள் திறக்கப்பட்டிருந்தன.
மதுபானம் வழங்கும் கவுன்டருக்கு பலரும் பீர் பாட்டில்கள் வாங்க சென்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் சமாளிக்க முடியாமல் திணறினர். பின், நிலைமை சகஜ நிலைக்கு வந்ததது.
அருகில் இருந்த மற்றொரு கவுன்டரில் வினியோகிக்கப்பட்ட, 180 மி.லி., 'டெட்ரா பேக்' மதுபானத்தையும் பலரும் வாங்கி சென்றனர். அங்கு கூட்ட நெரிசலை சமாளிக்க 'பவுன்சர்களும்' நியமிக்கப்பட்டிருந்தனர்.
மதுபானம் வாங்கியவர்கள், பாராட்டு விழா நடந்த பகுதியிலேயே அமர்ந்து குடித்தனர். இந்த வீடியோக்கள், சமூக வலைதளங்களிலும், ஊடகத்திலும் வெளியானது. இது மாநில அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்க்கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெங்களூரில் துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''நெலமங்களாவில் பா.ஜ., நிகழ்ச்சியில் மது வினியோகம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு பதிவு செய்வது வேறு விஷயம். ஆனால், உள்ளூர் பா.ஜ., தலைவர்களின் இதுபோன்ற கலாசாரத்துக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா, பதில் சொல்ல வேண்டும்,'' என்றார்.
சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தனது 'எக்ஸ்' சமூக வலைளத்தில் குறிப்பிடுகையில், 'மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பா.ஜ., தலைவர்கள் மதுபானம் வினியோகத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நான் மங்களூரு சென்ற போது, அங்கு நீச்சல் குளத்தில் நீந்தியதற்கு கேள்வி எழுப்பிய பா.ஜ.,வினர், இப்போது எங்கு சென்றனர். இதுதான் உங்கள் கலாசாரமா' என கேள்வி எழுப்பி உள்ளார்.
மாநிலம் முழுதும் இவ்விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சிக்கபல்லாபூரில் நேற்று பா.ஜ., - எம்.பி., சுதாகர் அளித்த பேட்டி:
நான் பாராட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை. பா.ஜ., - ம.ஜ.த.,வினர் தான் ஏற்பாடு செய்து, என்னை அழைத்தனர். நானும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக்கும் கலந்து கொண்டு திரும்பினோம். அதன் பின்னரே, மது வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இவ்விஷயத்தை, ஊடகங்கள் வாயிலாக தான் தெரிந்து கொண்டேன்.
யார் மது வினியோகித்தது என்று தெரியவில்லை. தலைவர்களை அழைத்து, இதுபோன்று செய்திருக்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளேன். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் கவனமாக இருப்போம்.
பொது இடங்களில் மது வினியோகிப்பது மன்னிக்க முடியாத குற்றம். எனது 20 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், ஒரு போதும் மது வினியோகித்ததில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
9_DMR_0003, 9_DMR_0004, 9_DMR_0005
பா.ஜ., - எம்.பி., சுதாகருக்கு நடந்த பாராட்டு விழாவில், உணவு - இடது, மதுபானம் - வலது புறத்தில் கவுன்டரில் அலைமோதிய கூட்டம். (அடுத்த படம்) பாட்டில் வாங்க தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. (கடைசி படம்) டெட்ரா பாக்கெட் மதுபானத்தை வாங்கி சென்ற, 'குடி'மகன்கள். இடம்: நெலமங்களா, பெங்களூரு.
போலீசில் அனுமதி
முன்னதாக, நெலமங்களா தாலுகா பா.ஜ., தலைவர் ஜெகதீஷ் சவுத்ரி, அப்பகுதி டி.எஸ்.பி.,க்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், பா.ஜ., - எம்.பி., சுதாகருக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு உணவு, மதுபானம் வழங்க அனுமதிக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி, பல்வேறு வகையான மதுபாட்டில்கள் அடங்கிய 130 பெட்டிகள் வினியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு கிடைத்த தகவலின்படி, 650 பீர் பாட்டில் பெட்டிகள்; 450 பெட்டிகள் கொண்ட மற்ற மதுபான பாட்டில்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.