ADDED : ஜூலை 08, 2024 06:47 AM
தங்கவயல் உட்பட கோலார் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 57 பேர் பாதித்துள்ளனர்.
கோலாரின் துாரதேவண்டஹள்ளி கிராமத்தில், கொசு ஒழிப்பு குறித்து, நேற்று விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. கோலார் மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரி பத்மா பசந்தப்பா பேசியதாவது:
கோலார் மாவட்ட நிர்வாகமும், சுகாதார நலத்துறையும் இணைந்து டெங்கு இல்லாத மாவட்டம் உருவாக்க பாடுபட வேண்டும். டெங்கு மற்றும் சிக்குன்குனியா, காலரா, மலேரியா பரவுவதற்கு காரணமான கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் தடுக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, அவைகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடுகளின் அருகே குப்பை,
தண்ணீர் தேங்க விடக் கூடாது. சாக்கடை, கழிவுநீர் உள்ள இடங்களில் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இதனால், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீடுகளில் கொசு வலைகளை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர்ஜெகதீஷ் கூறுகையில், ''கோலார் மாவட்டத்தில் ஜனவரி முதல் இதுவரை 686 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 57 பேருக்கு டெங்கு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
''பருவ மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். இதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளது,'' என்றார்.
சீனிவாசப்பூரில் 5, முல்பாகலில் 7, பங்கார்பேட்டையில் 11, தங்கவயலில் 7, கோலாரில் 19, மாலுாரில் 8 என, 57 பேருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதாக தெரியவந்துள்ளது.