வரதட்சணையை ஆதரிக்கிறாரா 'ஷாதி டாட் காம்' நிறுவனர்?
வரதட்சணையை ஆதரிக்கிறாரா 'ஷாதி டாட் காம்' நிறுவனர்?
வரதட்சணையை ஆதரிக்கிறாரா 'ஷாதி டாட் காம்' நிறுவனர்?
ADDED : ஜூன் 01, 2024 07:00 AM

மும்பை: திருமண வரன் பார்க்கும், 'ஷாதி டாட் காம்' இணையதளத்தில், 'டவுரி கால்குலேட்டர்' எனப்படும், வரதட்சணையை கணக்கிடும் வசதி அறிமுகப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருமண வரன்களை, 'ஆன்லைன்' வாயிலாக பார்க்கும் நடைமுறையை முதல்முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனம் ஷாதி டாட் காம். இதை, அனுபம் மித்தல் என்பவர் துவங்கினார். இந்த இணையதளத்தில், 'டவுரி கால்குலேட்டர்' என்ற புதிய சேவை சமீபத்தில் அறிமுகமானது.
இது குறித்து அனுபம் மித்தல் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: முன்னொரு காலத்தில், வரதட்சணை குறித்த பேச்சு வார்த்தையை மாப்பிள்ளை வீட்டார் நேரடியாக நடத்தி வந்தனர். தற்போது, மாப்பிள்ளையின் வயது, வேலை, மாத சம்பளம், வைத்திருக்கும் மொபைல் போன், தேனிலவுக்கு மாலத்தீவா, லட்சத்தீவா என்பதையெல்லாம் கணக்கிட்டே வரதட்சணை நிர்ணயிக்கப்படுகிறது.
எனவே, உங்கள் வரதட்சணை மதிப்பு எவ்வளவு என்பதை, உங்கள் விபரங்களின் அடிப்படையில் இந்த கால்குலேட்டர் கணக்கிட்டு சொல்லும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதன் வாயிலாக, அனுபம் மித்தல் வரதட்சணையை ஆதரிக்கிறாரா என பலர் கேள்வி எழுப்பினர். இது சர்ச்சையானது. அதன் பின் தான் உண்மை நிலவரம் தெரியவந்தது.
அந்த டவுரி கால்குலேட்டரில் விபரங்களை அளித்தவுடன், வரதட்சணை தொகையை கணக்கிட்டு சொல்லும் முன், நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த வரதட்சணை படுகொலைகளின் எண்ணிக்கையை தெரிவிக்கிறது. 'வரதட்சணை மதிப்பை விட, பெண்ணின் வாழ்க்கை மதிப்பற்றது இல்லையா' என, அறிவுரையும் வழங்குதை பார்த்த பலர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அனுபம் மித்தலை பாராட்ட துவங்கியுள்ளனர்.