விதி மீறும் அரசு பஸ் ஓட்டுனர்கள் கே.எஸ்.ஆர்.டி.சி., எச்சரிக்கை
விதி மீறும் அரசு பஸ் ஓட்டுனர்கள் கே.எஸ்.ஆர்.டி.சி., எச்சரிக்கை
விதி மீறும் அரசு பஸ் ஓட்டுனர்கள் கே.எஸ்.ஆர்.டி.சி., எச்சரிக்கை
ADDED : ஜூலை 20, 2024 06:28 AM

பெங்களூரு: 'பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில், விதிகளை மீறி பஸ் ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, 500 முதல் 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என, கே.எஸ்.ஆர்.டி.சி., எச்சரித்துள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்டுபிடிக்க, 'இண்டெலிஜென்ட் டிராபிக் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை முழுதும் இத்தகைய கேமராக்கள், வாகனங்களை கண்காணிக்கின்றன.
விதிமுறைகளை மீறும் வாகனங்கள் பற்றிய தகவலை, பதிவு எண்களுடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புகின்றன. கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களும், போக்குவரத்து விதிகளை மீறுவது தெரிந்துள்ளது.
சட்டப்படி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் ஓட்டுனர்களுக்கும், அபராதம் விதிக்கப்படும்.
அதிவேகமாக பஸ் ஓட்டினால், 2,000 ரூபாய், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், அபாயகரமாக பஸ் ஓட்டினால், பஸ் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தினால், ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில், பஸ்சை நிறுத்தினால்;
போக்குவரத்து போலீசாரின் உத்தரவை பின்பற்றாவிட்டால், அமைதியான பகுதிகளில், அதிக சத்தத்துடன் ஹார்ன் அடித்தால், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற, அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடா விட்டால், தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பஸ் ஓட்டும் போது, திடீரென பாதை மாறினால், ஒரு வழி பாதையில் சென்றால், டிராபிக் சிக்னலை ஜம்ப் செய்தால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.