மனைவியின் மரண வாக்குமூலத்தில் சந்தேகம் துாத்துக்குடி கணவரின் ஆயுள் தண்டனை ரத்து
மனைவியின் மரண வாக்குமூலத்தில் சந்தேகம் துாத்துக்குடி கணவரின் ஆயுள் தண்டனை ரத்து
மனைவியின் மரண வாக்குமூலத்தில் சந்தேகம் துாத்துக்குடி கணவரின் ஆயுள் தண்டனை ரத்து
ADDED : மார் 13, 2025 02:33 AM
புதுடில்லி, 'மரண வாக்குமூலத்தில் சந்தேகம் இருந்தால், வழக்கின் மற்ற அம்சங்களின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மனைவியைக் கொன்றதாக துாத்துக்குடியைச் சேர்ந்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் துாத்துக்குடியைச் சேர்ந்த பெண்ணை, 2008 செப்டம்பரில் தீவைத்து கொளுத்தியதாக அவருடைய கணவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், 2012 பிப்ரவரியில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
முக்கிய சாட்சி
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அசானுதீன் அமானுல்லா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
நம் கிரிமினல் சட்டங்களின்படி, மரண வாக்குமூலம் என்பது முக்கியமான சாட்சியாகவும், ஆதாரமாகவும் உள்ளது. அதனடிப்படையில், வழக்கில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், இந்த மரண வாக்குமூலம், வழக்கின் தன்மைக்கு பொருந்துகிறதா என்பதை நீதிமன்றங்கள் பார்க்க வேண்டும்.
வழக்கின் மற்ற சாட்சிகள், ஆதாரங்கள், குற்றம் நடந்த விதம் உள்ளிட்டவற்றையும் பார்க்க வேண்டும். குறிப்பாக, மரண வாக்குமூலத்தில் சந்தேகம் இருந்தால், அதை மட்டும் அடிப்படையாக வைத்து உத்தரவு பிறப்பிக்கக் கூடாது.
இந்த வழக்கில், தீக்காயமடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மூன்று வாரங்களுக்குப் பின் உயிரிழந்தார். முதலில் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டு காயமடைந்ததாக கூறியுள்ளார்.
அதன்பின், மாஜிஸ்திரேட் முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தில், தன் கணவர் தீவைத்ததாக கூறியுள்ளார்.
உத்தரவு
மாஜிஸ்திரேட் முன்னிலையில் அளித்த வாக்குமூலமே அதிகாரப்பூர்வ வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன்அடிப்படையில், கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கணவன், மனைவிக்கு இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்துள்ளது. தான் தாக்கப்பட்டதாக, மனைவியின் தந்தை மற்றும் சகோதரன் மீது, கணவர் ஏற்கனவே ஒரு புகாரும் அளித்துள்ளார்.
இவற்றில் இருந்து பார்க்கும்போது, கணவன், மனைவிக்குள் சச்சரவு இருந்து வந்துள்ளது தெளிவாகிறது.
மேலும், போலீஸ் விசாரணையில், வரதட்சணை கொடுமை செய்யப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று கூறப்பட்டு உள்ளது.
சந்தேகத்துக்குரிய வகையில் மரண வாக்குமூலம் உள்ளதால், இந்த வழக்கில் இருந்து கணவரை விடுவித்து உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.