நீட் வினாத்தாள் கசிவு; மருத்துவ மாணவி கைது
நீட் வினாத்தாள் கசிவு; மருத்துவ மாணவி கைது
நீட் வினாத்தாள் கசிவு; மருத்துவ மாணவி கைது
ADDED : ஜூலை 20, 2024 02:39 AM

புதுடில்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஜார்க்கண்டைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லுாரி மாணவி ஒருவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட், கடந்த மே 5ம் தேதி நடந்தது.
இதில், வினாத்தாள் லீக் ஆனது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், ஓ.எம்.ஆர்., எனப்படும் விடைத்தாளில் மோசடி என, பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
விசாரணை
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதுவரை பீஹார், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் இந்த வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் உள்ள பெட்டியில் இருந்து, நீட் வினாத்தாளை திருடியதாக பங்கஜ் குமார் என்பவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் பீஹார் மாநிலம் பாட்னாவில் சமீபத்தில் கைது செய்தனர்.
அவருக்கு உதவியதாக ராஜு சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் நான்கு பேரை நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரையும், நான்கு நாட்கள் காவலில் எடுத்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 பேர்
சமூக வலைதளங்களில் 'சால்வர் கேங்' என்ற பெயரில் நீட் வினாத்தாள் கசிய விட்ட குழுவில் ஜார்க்கண்ட் ஹசாரிபாகில் உள்ள மருத்துவ கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி சுரபி குமாரி என்பவருக்கும் பங்கு உள்ளதை, சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டறிந்து நேற்று கைது செய்தனர்.
நீட் வினாதாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.