ம.ஜ.த., மாநில தலைவர் பதவி? நிகில் குமாரசாமி மறுப்பு!
ம.ஜ.த., மாநில தலைவர் பதவி? நிகில் குமாரசாமி மறுப்பு!
ம.ஜ.த., மாநில தலைவர் பதவி? நிகில் குமாரசாமி மறுப்பு!
ADDED : ஜூன் 13, 2024 04:42 PM

பெங்களூரு:''ம.ஜ.த., மாநில தலைவர் பதவிக்கு, எனது பெயர் அடிபடுகிறது. ஆனால், மாநில தலைவராகும் தகுதி, எங்கள் கட்சியின் நிறைய மூத்த தலைவர்களிடம் உள்ளது,'' என, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
குமாரசாமி இரண்டு முறை முதல்வராக பணியாற்றியுள்ளார். அவரது மக்கள் பணியை பார்த்து, பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையில் இணைத்துள்ளார். நாட்டையும், நமது மாநிலத்தையும் வளர்ச்சி அடைய வைக்கும் வகையில், குமாரசாமிக்கு கனரக தொழிற்சாலைகள், உருக்கு துறை கிடைத்துள்ளது.
மத்திய அமைச்சராக பொறுப்பேற்றவுடன் டில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் குமாரசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று டில்லியில் இருந்து விமானத்தில் பெங்களூரு வருகிறார். அவரை வரவேற்க தேவனஹள்ளி, சிக்கப்பல்லாபூர், கோலார் ஆகிய பகுதிகளை சேர்ந்த எங்கள் கட்சியினர் ஆர்வமாக இருக்கின்றனர்.
எங்கள் கட்சி துவங்கியதில் இருந்து தேவகவுடா, குமாரசாமி மீது மாண்டியா, ராம்நகர் மாவட்ட மக்கள் அன்பு காட்டி வருகின்றனர். மாண்டியா மக்களின் ஆசியால், குமாரசாமி தற்போது மத்திய அமைச்சர் ஆகியுள்ளார். சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் கூட்டணி வேட்பாளராக யார் போட்டியிடுவர் என்று, கூட்டணித் தலைவர்கள் முடிவெடுப்பர்.
முன்னாள் அமைச்சர் யோகேஸ்வரும் இந்த தொகுதியில் நிறைய வேலை செய்துள்ளார். லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் வேட்பாளர் மஞ்சுநாத் வெற்றிக்காக உதவியுள்ளார். குமாரசாமி மத்திய அமைச்சராகி விட்டதால், ம.ஜ.த., தலைவர் பதவிக்கு, எனது பெயர் அடிபடுகிறது. நான் தற்போது கட்சியின் இளைஞர் அணி தலைவராக உள்ளேன். கட்சியை பலப்படுத்தும் பொறுப்பு என்னிடம் உள்ளது.
மாநில தலைவராகும் தகுதி, எங்கள் கட்சியின் நிறைய மூத்த தலைவர்களிடம் உள்ளது. அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய பொறுப்பு எனது தோளில் உள்ளது. குமாரசாமி எம்.பி., பதவியை ராஜினாமா செய்வார் என்று, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் கூறி உள்ளார். அவரது கருத்துக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். ஹாசனில் நாங்கள் தோற்றது வருத்தம் அளிக்கிறது. எங்கு தவறு நடந்தது என்று கண்டறிய வேண்டியது அவசியம். அதை கண்டறிந்து ஹாசனில் கட்சியை பலப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.*