'பேரன்ட்ஸ் அன்பே காட்டலே... மார்க் எடுக்க மட்டும் நிர்ப்பந்திக்கிறாங்க!' பெற்றோருடன் செல்ல மாணவர் மறுப்பு
'பேரன்ட்ஸ் அன்பே காட்டலே... மார்க் எடுக்க மட்டும் நிர்ப்பந்திக்கிறாங்க!' பெற்றோருடன் செல்ல மாணவர் மறுப்பு
'பேரன்ட்ஸ் அன்பே காட்டலே... மார்க் எடுக்க மட்டும் நிர்ப்பந்திக்கிறாங்க!' பெற்றோருடன் செல்ல மாணவர் மறுப்பு

மங்களூரு, தேர்வில் அதிக மதிப்பெண் பெற அழுத்தம் கொடுத்ததால் வீட்டில் இருந்து வெளியேறிய கல்லுாரி மாணவர், மீண்டும் பெற்றோருடன் செல்ல மறுத்த சம்பவம், கர்நாடக மக்களை வேதனை அடைய வைத்தது.
தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் பரங்கிப்பேட் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவரது பெற்றோருக்கு ஒரே மகன். பி.யு.சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த மாதம் 25ம் தேதி, இறுதி பருவத் தேர்வுக்கான 'ஹால் டிக்கெட்' வாங்க கல்லுாரிக்குச் சென்றவர், வீடு திரும்பவில்லை.
அவரை கண்டுபிடிக்க, எஸ்.பி., தலைமையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது.
இதற்கிடையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாணவரின் தந்தை, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் காமேஸ்வர் ராவ், நடாப் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாணவரின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 8ம் தேதி, உடுப்பியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சட்டை வாங்க வந்திருந்த மாணவரை போலீசார் மீட்டனர். அவர் தற்போது மங்களூரு சிறுவர் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டார்.
தேர்வுக்கு பயந்து மாணவர் வீட்டைவிட்டு வெளியேறியதாக, எஸ்.பி.யதீஷிடம் கூறி இருந்தார்.
இந்நிலையில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.
போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், மாணவர் தன் பெற்றோருடன் செல்ல மறுக்கிறார். அவரது நலன் கருதி, யோசித்து முடிவு எடுக்க வேண்டியது அவசியம், என்றார்.
மனுதாரர் தரப்பு வக்கீல் கூறுகையில், மாணவர் மீட்கப்பட்ட அன்று தன் தாயிடம் மொபைல் போனில் பேசினார். தன்னை யாரோ கடத்திச் சென்றதாக கூறினார். மாணவரை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும், என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'தேர்வை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தேர்வு குறித்து ஏன் அழுத்தம் கொடுக்கிறீர்கள்?' என்று மாணவரின் பெற்றோரிடம் கேட்டனர்.
'இந்த விவகாரத்தில் குழந்தைகள் நலக் குழு முடிவு எடுக்க வேண்டும்' என கூறிய நீதிபதிகள், மனு மீதான அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
சிறுவர் காப்பகத்தில் உள்ள மாணவரை சந்தித்து பேசுவதற்கு பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மகனை சந்தித்து பேச பெற்றோர் நேற்று மங்களூரு புறப்பட்டு சென்றனர்.
எஸ்.பி., யதீஷிடம் மாணவர், தனக்கு பெற்றோரின் அன்பு கிடைக்கவில்லை என்றும், தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறுவதை மட்டுமே நிர்ப்பந்தித்ததாகவும் கூறி வருந்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.