பா.ஜ., முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பா.ஜ., முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பா.ஜ., முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ADDED : ஜூலை 28, 2024 11:15 PM

புதுடில்லி: “மத்திய - மாநில அரசுகளின் முயற்சி மற்றும் ஒருங்கிணைப்பால், 'விக்சித் பாரத்' எனப்படும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கு சாத்தியமாகி வருகிறது,” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்ற இரண்டு நாள் கூட்டம் டில்லியில் நடந்தது. இதில், பா.ஜ., ஆளும் மத்திய பிரதேசம், மணிப்பூர், சத்தீஸ்கர் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 13 முதல்வர்கள், 15 துணை முதல்வர்கள் பங்கேற்றனர்.
நிறைவு நாளான நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலங்களின் வளர்ச்சி, அங்கு நிலவும் பிரச்னைகள் குறித்து முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:
'விக்சித் பாரத்' எனப்படும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய நம் பயணம் மிகவும் முக்கியமானது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைப்பு காரணமாக, அந்த இலக்கை நாம் எளிதில் எட்டி வருகிறோம்.
அரசின் நலத்திட்டங்கள் அவர்களை சென்று சேர்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இதற்கு சமூக ஊடகங்களை மாநில அரசுகள் அதிகளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்கள் நல்லாட்சிக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, ராஜேந்திர பிரதான் உள்ளிட்ட பா.ஜ., மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஒவ்வொரு துறையிலும் மாநிலங்களின் வளர்ச்சி குறித்தும், மக்களின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.