-திஹாரில் பயங்கரவாதிகள் கல்லறைகளை அகற்ற கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு
-திஹாரில் பயங்கரவாதிகள் கல்லறைகளை அகற்ற கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு
-திஹாரில் பயங்கரவாதிகள் கல்லறைகளை அகற்ற கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு
ADDED : செப் 25, 2025 02:41 AM
புதுடில்லி:திஹார் சிறை வளாகத்தில் உள்ள பயங்கரவாதிகள் முஹமது அப்சல் குரு மற்றும் முஹமது மக்பூல் பட் ஆகியோர் கல்லறைகளை அகற்ற உத்தர விடக் கோரிய பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
பிரிட்டனில் இந்தியத் துாதர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முஹமது மக்பூல் பட, 1984ம் ஆண்டு டில்லி திஹார் சிறையில் துாக்கிலிடப்பட்டார்.
அதேபோல, 2001ம் ஆண்டு பார்லிமென்ட் வளாகத்தில் தாக்குதல் நடத்திய வழக்கில் முஹமது அப்சல் குரு, 2013ம் ஆண்டு பிப்ரவரியில் துாக்கிலிடப்பட்டார். இருவர் உடல்களும் திஹார் சிறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
இந்நிலையில், விஷ்வ வேத சனாதன் மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:
பயங்கரவாதிகள் முஹமது அப்சல் குரு மற்றும் முஹமது மக்பூல் பட் ஆகியோருக்கு டில்லி திஹார் சிறை வளாகத்தில் கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், அங்கு அஞ்சலி செலுத்த பலர் வேண்டுமென்றே சில குற்றங்களைச் செய்து விட்டு சிறைக்குள் செல்கின்றனர். இது, திஹாரில் உள்ள மற்ற கைதிகளுக்கு தொந்தரவாக இருக்கிறது. சிறைச்சாலைக்குள் கல்லறைகள் கட்டப்பட்டு இருப்பது சட்டவிரோதமானது.
இது, திஹார் சிறையை பயங்கரவாதிகளின் யாத்திரை தலமாக மாற்றி விடும். இது, டில்லி சிறைச்சாலை விதிமுறைகள் -2018ஐ அப்பட்டமாக மீறுகிறது. எனவே, இரு கல்லறைகளையும் சிறைக்கு வெளியே ரகசிய இடத்துக்கு மாற்ற சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் வருண் குமார் சின்ஹா ஆஜராகி வாதாடினார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பொதுநல மனு தாக்கல் செய்யும் போது, அரசியலமைப்பு உரிமைகள், அடிப்படை உரிமைகள் அல்லது சட்டப்பூர்வ உரிமைகள் மீறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
சிறை வளாகத்துக்குள் தகனம் செய்வதையோ அல்லது உடல் அடக்கம் செய்வதையோ எந்தச் சட்டமோ அல்லது விதிமுறைகளோ தடை செய்யவில்லை.
திஹார் சிறை வளாகத்தில் இருந்து கல்லறைகளை அகற்றுவதால் ஏற்படும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு அரசால் எடுக்கப்பட்ட முடிவு என்பதால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது.
செய்திகள் அடிப்படையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்ய முடியாது. கல்லறைகள் இருப்பது தொந்தரவாக உள்ளது என ஏதேனும் கைதிகள் புகார் செய்துள்ளார்களா? மேலும், 12 ஆண்டுகளுக்குப் பின், இந்தப் பிரச்னையை எழுப்ப வேண்டிய அவசியம் என்ன? மனுதாரர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு கூடுதல் விபரங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு வழக்கறிஞர் வருண் குமார் சின்ஹா வேண்டுகோள் விடுத்தார்.