பானிபூரியில் அபாயமான அம்சங்கள்; தடை விதிக்க சுகாதார துறை திட்டம்?
பானிபூரியில் அபாயமான அம்சங்கள்; தடை விதிக்க சுகாதார துறை திட்டம்?
பானிபூரியில் அபாயமான அம்சங்கள்; தடை விதிக்க சுகாதார துறை திட்டம்?
ADDED : ஜூன் 28, 2024 07:54 AM

பெங்களூரு : பானிபூரியில் நோய்களை ஏற்படுத்தும் அம்சங்கள் உள்ளதால், அதற்கு தடை விதிக்க சுகாதாரத் துறை ஆலோசிக்கிறது.
கர்நாடகாவில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன், கபாப்களில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறங்கள், உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பது, ஆய்வில் தெரியவந்தது. எனவே இந்த தின்பண்டங்களில், செயற்கை நிறம் பயன்படுத்த கர்நாடக சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.
பலரும் விரும்பி சாப்பிடும் பானிபூரி தயாரிக்க பயன்படுத்தப்படும் நீரில், அபாயகரமான நிறம் பயன்படுத்தப்படலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. பானிபூரி உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா என்பதை கண்டறிய, உணவுத்துறை, பானிபூரி மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியது. இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயகரமான ரசாயனம் பயன்படுத்துவது தெரிந்தது.
பரிசோதனைக்கு உட்பட்ட 243 மாதிரிகளில், 43 மாதிரிகள் சாப்பிட தகுதியானது அல்ல. மேலும் சில பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. இன்னும் அறிக்கை வரவில்லை. அறிக்கை வந்த பின் பானிபூரிக்கு தடை விதிப்பது குறித்து, சுகாதாரத்துறை ஆலோசிக்கிறது.
இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலம் முழுதும், 200க்கும் மேற்பட்ட பானிபூரி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மால்கள், பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களின் வெளியே, நடைபாதை வியாபாரிகள் விற்கும் பானிபூரி, திருமணம் உட்பட பல இடங்களில் இருந்தும், மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
தின்பண்டங்களில் செயற்கை நிறங்கள் பயன்படுத்துவதால், ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.