மக்கள் சேவகனாக இருக்க ஆசைப்படும் எஸ்.ஐ.,
மக்கள் சேவகனாக இருக்க ஆசைப்படும் எஸ்.ஐ.,
மக்கள் சேவகனாக இருக்க ஆசைப்படும் எஸ்.ஐ.,
ADDED : ஜூன் 02, 2024 06:09 AM

போலீஸ் என்றாலே பொதுமக்களுக்கு, சற்று பயம் இருக்கும். அதிலும் போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., என்று பதவியில் இருப்பவர்களை பார்த்தால், மக்கள் அருகில் சென்று பேசுவதற்கு யோசிப்பர்.
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் இருக்கும், போலீஸ் அதிகாரிகள் சில நேரங்களில் கரடுமுரடாக நடந்து கொண்டாலும், அவர்களுக்கும் மனிதநேயம் உண்டு. மனிதநேயத்துடன் மக்களுக்கு உதவி செய்யும், எஸ்.ஐ., பற்றி இங்கு பார்க்கலாம்.
நண்பனாக பழகி...
பல்லாரியின் குருகோடு தாலுகா, ஜெனிகேஹலு கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தப்பா குருபரா, 35. கடந்த 2015ல் எஸ்.ஐ., தேர்வு எழுதினார். 2016ல் வெளியான தேர்வு முடிவுகளில், அவர் வெற்றி பெற்றார்.
பல்லாரி ஸ்ரீராம்புரா போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ., ஆனார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால், ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வதற்கு, முன்னுரிமை அளித்தார். பொதுமக்களிடம், நண்பனாக பழகி, பிரச்னையை தீர்ப்பதற்கும் உதவினார்.
தன்னம்பிக்கை
இதுகுறித்து சாந்தப்பா குருபரா கூறியதாவது:
போலீஸ் என்றால் பொதுமக்களுக்கு பயம் உள்ளது. தவறு செய்பவர்கள் தான், எங்களை பார்த்து பயப்பட வேண்டும். பொதுமக்களின், நண்பனாக இருக்கவே போலீசார் விரும்புவர். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து உள்ளேன்.
என் தந்தை மரம் வெட்டும் தொழில் செய்து, என்னை படிக்க வைத்தார். சிறிய கூடாரத்தில் தான் வசித்தோம். தந்தை செய்யும் தொழிலை, பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்று இல்லை.
கடந்த 2020ல் கொரோனா நேரத்தில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. அந்த நேரத்தில் மொபைல் போன்கள் வாங்க, ஏழை மாணவர்களிடம் பணம் இல்லை. இதுபற்றி அறிந்ததும் மொபைல் போன் வாங்க முடியாத மாணவர்களை, ஒரு இடத்தில் ஒருங்கிணைத்து பாடம் எடுத்தேன். அவர்களுக்கு தன்னம்பிக்கை வளர செய்தேன்.
கல்வி தான்...
மாணவர்கள் திறமையை வெளிகொண்டு வர, விளையாட்டு போட்டிகள் நடத்தினேன். இதனால் மாணவர்கள், என்னுடன் சகஜமாக பழகினர். எஸ்.ஐ., சார்... எஸ்.ஐ., சார்... என்று, அன்புடன் அழைப்பர். என்னை பொறுத்தவரை யாருக்கும் கல்வி கிடைக்காமல் இருக்கக் கூடாது.
கல்வி தான் நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். கல்வியால் தான் தற்போது எஸ்.ஐ.,யாக உள்ளேன்.
யு.பி.எஸ்.சி., தேர்விலும் 644வது ரேங்க் வெற்றி பெற்று இருக்கிறேன். இதற்கு முன்பு ஏழு முறை, யு.பி.எஸ்.சி., தேர்வில் தோல்வி அடைந்தேன். ஆனாலும் மனம் தளரவில்லை.
மக்களுக்கு உதவி செய்வதால், என்னை மனிதநேயம் கொண்டவர் என்று, மக்கள் கூறுகின்றனர். என்னால் முடிந்ததை செய்கிறேன். எப்போதும் மக்களுக்கு சேவகனாக இருக்க ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -