Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு சிவகுமார் ஆதரவாளர் 'பார்ட்டி'

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு சிவகுமார் ஆதரவாளர் 'பார்ட்டி'

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு சிவகுமார் ஆதரவாளர் 'பார்ட்டி'

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு சிவகுமார் ஆதரவாளர் 'பார்ட்டி'

ADDED : ஜூலை 17, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று முதன் முறையாக எம்.எல்.ஏ.,க்கள் ஆனவர்களுக்கு, துணை முதல்வர் சிவகுமாருக்கு நெருக்கமானவர்கள், 'டின்னர் பார்ட்டி' ஏற்பாடு செய்தனர்.

கர்நாடக காங்கிரஸ், உட்கட்சி பூசலால் தள்ளாடுகிறது. தொண்டர்கள் கட்சிக்கு ஆதரவாக கோஷம் போடுவது, எதிர்க்கட்சியினரை விமர்சிப்பது, போராட்டம் நடத்துவது, தலைவர்களின் பின்னால் சுற்றுவது என, அவரவர் பணிகளை செய்கின்றனர்.

ஆனால் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகின்றனர்.

'முதல்வர் மாற்றம், கூடுதல் துணை முதல்வர் பதவியை உருவாக்க வேண்டும்' என, வலியுறுத்தி சர்ச்சையை கிளப்புகின்றனர்.

இதற்கிடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பலரும், மாநில அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

'வாக்குறுதி திட்டங்களுக்கு, பெருமளவில் பணம் செலவிடுகின்றனர். தொகுதி வளர்ச்சிக்கு நிதி வழங்கவில்லை.

'இடமாற்றம் விஷயத்திலும், தங்களின் கருத்துகள், சிபாரிசுகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை. எம்.எல்.ஏ.,க்களாக இருந்து என்ன பயன்' என, புலம்புகின்றனர்.

மேலும், 'நான்கைந்து முறை வெற்றி பெற்ற, மூத்த எம்.எல்.ஏ.,க்கள், செல்வாக்கு மிக்க எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு மட்டும், தாராளமாக நிதியுதவி வழங்குகின்றனர். முதன் முறையாக எம்.எல்.ஏ.,வானவர்களை புறக்கணிக்கின்றனர்' எனவும், குற்றம் சாட்டுகின்றனர்.

எங்கள் கஷ்டத்தை யாரும் கேட்பது இல்லை என, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இவர்களை சமாதானம் செய்ய, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கானிகா முயற்சிக்கிறார். இவர் துணை முதல்வர் சிவகுமாருக்கு நெருக்கமானவர். பெங்களூரின் தனியார் ஹோட்டலில், நேற்று முன்தினம் இரவு, காங்கிரசின் புதிய எம்.எல்.ஏ.,க்களுக்காக, ரவிகுமார் கானிகா டின்னர் பார்ட்டி ஏற்பாடு செய்தார். நள்ளிரவு வரை பார்ட்டி நீடித்தது.

பார்ட்டியிலும், அரசின் சில முடிவுகள் குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி தெரிவித்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று நடக்கவுள்ளது. இதிலும் கூட எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் கோபத்தை வெளிப்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us