'பேப்பர் பிளேட்' ஆக பயன்படுத்தப்பட்ட நோயாளிகளின் பரிசோதனை அறிக்கை
'பேப்பர் பிளேட்' ஆக பயன்படுத்தப்பட்ட நோயாளிகளின் பரிசோதனை அறிக்கை
'பேப்பர் பிளேட்' ஆக பயன்படுத்தப்பட்ட நோயாளிகளின் பரிசோதனை அறிக்கை
UPDATED : ஜூலை 07, 2024 10:45 PM
ADDED : ஜூலை 07, 2024 10:40 PM

மும்பை:அரசு மருத்துவமனை யில் நோயாளிகளின் பரிசோதனை அறிக்கைகள், பஜ்ஜி - போண்டா சாப்பிடும், 'பேப்பர் பிளேட்' ஆக பயன்படுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில், கிங் எட்வர்டு நினைவு அரசு மருத்துவமனை உள்ளது. இது, கே.இ.எம்., மருத்துவமனை என, அழைக்கப்படுகிறது.
விரிவான விசாரணை
இங்கு, நோயாளிகளின் மருத்துவ அறிக்கையில் தயாரிக்கப்பட்ட பேப்பர் பிளேட்டுகள், பஜ்ஜி - போண்டா உள்ளிட்ட நொறுக்கு தீனிகளை சாப்பிட பயன்படுத்தப்படும், 'வீடியோ' சமூக வலை
தளங்களில் வெளியானது.மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, விரிவான விசாரணைக்கு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எடுக்கும், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன், எக்ஸ் - ரே முடிவுகள், ஒரு போல்டரில் வைத்து நோயாளிகளிடம் வழங்கப்படுவது வழக்கம். பழைய போல்டர்களை அப்புறப்படுத்துவது வழக்கம். அதை வாங்கி செல்ல சில முகவர்கள் உள்ளனர். அவர்கள் அதை வாங்கி சென்றதும் துண்டு துண்டாக கிழித்துவிட வேண்டும் என்பது விதி.
நடவடிக்கை
ஆனால், பழைய போல்டர்களை வாங்கி சென்ற முகவர், அதை முறையாக அழிக்கவில்லை என்பது தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக விசாரிக்க மாநகராட்சி துணை கமிஷனர் தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆவணங்களை கையாளும் ஊழியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனை டீனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.