Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தங்கவயலில் ரிசர்வ் போலீஸ் பயிற்சி படை சிக்க உலகமதியில் இடம் தேர்வு ஆய்வு

தங்கவயலில் ரிசர்வ் போலீஸ் பயிற்சி படை சிக்க உலகமதியில் இடம் தேர்வு ஆய்வு

தங்கவயலில் ரிசர்வ் போலீஸ் பயிற்சி படை சிக்க உலகமதியில் இடம் தேர்வு ஆய்வு

தங்கவயலில் ரிசர்வ் போலீஸ் பயிற்சி படை சிக்க உலகமதியில் இடம் தேர்வு ஆய்வு

ADDED : ஜூன் 02, 2024 05:56 AM


Google News
தங்கவயல்: கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் படையின் பயிற்சி படையை, தங்கவயலின் சிக்க உலகமதி என்ற இடத்தில் அமைக்க, இடம் தேர்வு குறித்து நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

தங்கவயல் தாலுகா அந்தஸ்து பெறாத காலக்கட்டத்திலேயே, தங்கச் சுரங்கத்தில் உற்பத்தியான தங்கத்துக்கு, பாதுகாப்பு கருதி, 'தங்கவயல் போலீஸ் மாவட்டம்' உருவானது. இதனை அடுத்து தங்கவயலில் நீதிமன்றம், சிறை, ஆயுதப்படை போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை, மாரிகுப்பம், சாம்பியன், உரிகம், பெமல் நகர், பங்கார்பேட்டை, காம சமுத்ரா, பேத்தமங்களா என ஒன்பது போலீஸ் நிலையங்கள் இடம் பெற்றிருந்தது.

போலீஸ் நிர்வாக சீர்திருத்தத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாரிகுப்பம், சாம்பியன் என இரண்டு போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன. புதியதாக கேசம்பள்ளி, பூதிக்கோட்டை போலீஸ் நிலையங்கள் சேர்க்கப்பட்டன.

கர்நாடக மாநில அளவில், மாவட்டத்துக்கு ஒரு எஸ்.பி., அலுவலகம் மட்டுமே உள்ளது. ஆனால் கோலார் மாவட்டத்தில் மட்டுமே இரண்டு போலீஸ் எஸ்.பி., அலுவலகம் தேவையில்லை. எனவே, பல்லாரி மாவட்டத்தை இரண்டாக பிரித்து, விஜயநகர மாவட்டம் அமைத்த போது, தங்கவயலில் உள்ள எஸ்.பி., அலுவலக நிர்வாகத்தை அங்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டது.

தங்கவயல் போலீஸ் மாவட்டத்தை, கோலார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துடன் இணைக்கவும் ஏற்பாடுகள் நடந்தன. இதற்கு தங்கவயல், பங்கார்பேட்டை தொகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. போராட்டங்களால், திட்டத்தை அரசு கைவிட்டது.

தங்கவயலில் தேவையான அளவுக்கு, அரசு நிலம் காலியாக உள்ளன. தலைநகர் பெங்களூருக்கு 100 கிலோ மீட்டர் துாரமே உள்ளது; போக்குவரத்து வசதிகளும் உள்ளன. மேலும் தொழிற் பூங்கா, 100க்கும் அதிகமான பன்னாட்டு தொழிற்சாலைகள் அமைய உள்ளன. எனவே தங்கவயல் தொழில் நிறுவனங்களின் பாதுகாப்புக்காக, 'ரிசர்வ் போலீஸ் பயிற்சி படை' தேவையென, கர்நாடக அரசு முடிவு செய்தது.

எனவே, தங்கவயலின் சிக்க உலகமதி என்ற இடத்தில் நேற்று மாநில கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் பாட்டீல் ஆய்வு செய்தார். தங்கவயல் போலீஸ் எஸ்.பி., சாந்த ராஜூ உட்பட போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

எந்த இடத்தில் அமைப்பது என்பது குறித்து, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

படம் எடுக்க அனுமதி மறுப்பு

ரிசர்வ் போலீஸ் பயிற்சி படை அமைக்க இடம் தேர்வு குறித்த, ஆய்வு நிகழ்ச்சி தொடர்பாக, வீடியோ, படங்கள் எடுக்க வேண்டாமென போலீஸ் அதிகாரிகள் தடுத்து விட்டனர். இதனால் படங்கள் எடுக்கப்படவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us